×

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணி துவங்கப்படுமா?

திருப்பூர், ஜன. 19:  பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 திருப்பூரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்தியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. ரூ.18 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நடக்கிறது. இந்நிறுவனங்களில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், நாள்தோறும் திருப்பூரில் குடியேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், நகர மக்கள் தொகை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. இதில், பெரும்பாலான பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கொங்கு நகர் மற்றும் ஓடக்காடு ஆகிய பகுதிகளில் இரு இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளது. திருப்பூரில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓடக்காடு இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் 2 ஆயிரத்து 700 பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் சுமார் 78 ஆயிரம் பேரும், கொங்கு நகர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் சுமார் 70 ஆயிரம் பேரும், இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களாக உள்ளனர். சந்தாதாரர்கள் உள்ள அளவுக்கு திருப்பூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை.
நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், மருத்துவர்களால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், இ.எஸ்.ஐ. உள்ள தொழிலாளிகள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றால், கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 2011ல், பூண்டி ரிங் ரோட்டில் மருத்துவமனை கட்டுவதற்கு, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. கடந்த 2012ல், சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. இந்நிலையில் அரசு விழா மற்றும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கடந்த 2019, பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். அப்போது, திருப்பூரில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் அந்த இடத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. கடந்த 2019, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த இ.எஸ்.ஐ. கட்டுமான பிரிவு துணைக்குழு கூட்டத்தில், திருப்பூரில் மருத்துவமனை கட்டவதற்காக மத்திய பொதுப்பணித்துறை அளித்த கட்டிட வரைபடம், இ.எஸ்.ஐ. விதிமுறைகளுக்கு ஏற்றதாக இல்லை. மறு வரைபடம் தயாரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், அதன்பின், மருத்துவமனை கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தொழிலாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இ.எஸ்.ஐ. வாரிய கூட்டத்திலும், திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவது குறித்த எவ்வித பேச்சுக்களும் எழுப்படவில்லை என தெரிகிறது. மருத்துவமனை அமைக்கப்படாததால், புற்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது.இது தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, இனியும் காலம் கடத்தாமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இடத்தில், விரைவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும். மருத்துவ வசதிக்காக தொழிலாளர் சந்திக்கும் சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது, பின்னலாடை தொழிலாளர், தொழில் முனைவோரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Tags : Modi ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...