×

குடியுரிமை திருத்த சட்டம் தேசத்தை இரண்டாக பிரிக்கும்

பந்தலூர், ஜன. 19: பந்தலூரில் அனைத்து ஜமாத்துகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இப்பேரணி மேங்கொரேஞ் முனீஷ்வரன் கோயில் பகுதியில் துவங்கி பஜார் வழியாக பொதுக்கூட்டம் மேடையை வந்தடைந்தது. தொடர்ந்து கண்டனம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு நிர்வாகி ஆலி தலைமை வகித்தார். அனஸ் எடாலத் வரவேற்றார். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி முன்னிலை வகித்து பேசும்போது, மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ. சார்பில் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்து சட்டம் நிறை வேற்றியுள்ளது. இதற்கு  மக்களவையில் தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசியதாவது:- மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கருப்பு சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இந்திய விடுதலை வரலாற்றில் முஸ்லீம்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்திய பொருளாதாரம் கோமாவில் உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வேலை இழந்து உள்ளனர். தேசத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கத்தோடு குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு போன்ற சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இதற்காக போராடும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில்  முன்னாள் மாவட்ட தலைவர் கோசி பேபி, வி.சி.க. மாவட்ட செயலாளர் சகாதேவன்,  மா.கம்யூ. கட்சி நிர்வாகி யோவண்ணன், இ.கம்யூ. நிர்வாகி குணசேகரன், அ.ம.மு.க.  நிர்வாகி முஜிப்பூர் ரகுமான், முஸ்லிம் லீக் அனிபா, தி.மு.க. தலைமை செயற்குழு  உறுப்பினர் பாண்டியராஜ், ஊட்டி எம்.எல்.ஏ. கணேசன், கேரளாவை சேர்ந்த நிதின்  கணிச்சேரி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தி.மு.க. நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வக்கீல் சிவசுப்ரமணியம், வி.சி.க. ராஜேந்திரபிரபு, மணிகண்டன், போராட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் அனீஸ், ஹாஜி, அப்துல் ரகுமான், முரளிதரன், பசீர், உம்மர், ஜெய்சல் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

Tags : nation ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...