×
Saravana Stores

ஜன. 21ல் துவக்கம் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடுகள்

கரூர், ஜன. 14: போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19ம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: பிறந்த குழந்தை முதல் 5வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 19ம்தேதி அன்று நடைபெறுகிறது. 1.20லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 836 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 3300 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சிக்னல்கள், ரயில்நிலையங்கள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அந்த வழியே பயணம் செய்யும் பயணிகளிடம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதின் முக்கியத்தும் குறித்து பொதுமக்களிடையே குறிப்பாக கிராமப்புற மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அங்கன்வாடி மையங்கள், மழலையர் பள்ளிகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பள்ளிகளில் பயிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 5 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், நகராட்சி நகர்நல அலுவலர் பிரியா உட்பட அனைத்து துறை அலுலர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குட்கா விற்க முயன்றவர் மீது வழக்கு