×

காட்டுமன்னார்கோவில் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில், ஜன. 13: காட்டுமன்னார்கோவில் அருகே குடிநீர் தேவையை சமாளித்து வந்த கிணற்றை அசுத்தப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலர் விரக்தியில் அக்கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றை அசுத்தப்படுத்தி உள்ளனர். இதனால் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கிணற்றை  பயன்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவி ஏற்ற பிறகு மற்றும் நேற்று முன்தினம் துணைத் தலைவர் பதவி ஏற்ற பின்பு என நள்ளிரவில் இரண்டு முறை கிணற்றை அசுத்தப்படுத்தியதால், குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கந்தகுமாரன் பேருந்து நிலையம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டி.புத்தூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிணற்றை அசுத்தப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்ததன் பேரில் கிராம பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், நாங்களும் பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளோம். ஆனால் இது மாதிரி கீழ்த்தரமான ஒரு செயலை தற்போது தான் பார்க்கிறோம். இதுபோல் இரண்டு முறை நடைபெற்ற நிலையில் அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதால் நாங்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். போலீசார் உத்தரவாதம் அளித்ததன்பேரில் தற்போது எங்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். கிணற்றை அசுத்தப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : road ,Katumannarkovil ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...