×

களியக்காவிளை எஸ்.ஐ படுகொலை கொலையாளிகள் இருக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் நெய்யாற்றின்கரையில் விட்டுச்சென்ற மர்ம பை எங்கே?...ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை

நாகர்கோவில், ஜன.13:  களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வரும் கொலையாளிகள் நெய்யாற்றின்கரையில் நடமாடும் புதிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அவர்கள் அங்கு விட்டு சென்ற மர்ம பை எங்கே? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் - கேரள எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை மார்க்கெட் சோதனை சாவடி பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8ம் தேதி இரவு அடையாளம் தெரியாத 2 பேரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), கோட்டார், இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இவர்களை பிடிக்க குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முழு வீச்சில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அப்துல் சமீம், தவுபிக் இருவரும் களியக்காவிளை வரை வந்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு செல்லும்போது மேலும் இருவர் இவர்களுக்கு உதவியதும் தெரியவந்துள்ளது. சோதனை சாவடிக்கு அரை கி.மீ தூரத்தில் பிபிஎம் ஜங்ஷனில் வாகனத்தில் வந்து இறங்கியவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சோதனை சாவடி அருகே சென்றடைந்துள்ளனர். பின்னர் சோதனை சாவடியை பார்வையிட்டு சென்ற பின்னர் திரும்பி மீண்டும் அதே பாதையில் வந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடந்த வேளையில் ஒரு கார் களியக்காவிளையில் இருந்து பாறசாலை நோக்கி விரைவாக சென்றதும்,  இஞ்சிவிளை அருகே ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சிவிளையில் நிறுத்தியிருந்த காரில் இரண்டு பேர் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஐங்காமம் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு உடையவர் என்று கருதப்படுகின்ற ஐங்காமம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்ய தமிழக போலீசார் திருவனந்தபுரம் அருகே விதுராவில் உள்ள அவரது மனைவி வீட்டில் நடத்திய சோதனையில் பலன் கிடைக்கவில்லை. அங்கு அவர் நடத்தி வரும் கம்ப்யூட்டர் சென்டரில் நடத்திய சோதனையில்  ஹார்டு டிஸ்குகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என்பது தமிழக போலீசாரின் முடிவு ஆகும். இதனால் மற்றொரு எல்லையான பாலக்காடு முதல் தமிழக-கேரள எல்லைப்புற மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பாறசாலை, இஞ்சிவிளை பகுதியை சேர்ந்த காசிம், சித்திக் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோரிடம் நேரிலும், போனிலும் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதில் ஒருவர் தவுபிக்கின் மனைவியின் உறவினர் ஆவார்.மேலும் ஒருவர் பெட்டிக்கடை நடத்தி வருபவர், மற்றொருவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். பூந்துறையில் பிடிபட்டவர் பல  ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் மத மோதல்களுக்கு காரணமாக இருந்தவர்  என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எஸ்ஐ வில்சன் கொலை தொடர்பாக தமிழக-கேரள போலீசார் இணைந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொலையாளிகள் இருவரும் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் புதன்கிழமை இரவு 8.40 மணியளவில் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அருகே சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது ஒருவரது கையில் மர்ம பை ஒன்று இருக்கிறது. சிறிது தூரம் சென்ற பின்னர் அதனை சாலையோரம் கடை பகுதியில் வைத்துவிட்டு தொடர்ந்து நடந்து செல்கின்றனர். அதில் அவர்களது உடை, ஆயுதங்கள் ஏதேனும் இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. இந்த மர்ம பை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பை வைத்த இடத்தில் சென்றபோது அங்கு பை கிடைக்கவில்லை. அதனை கூட்டாளிகள் யாரேனும் எடுத்து சென்றார்களா, பை எங்கிருந்து வாங்கப்பட்டது, அதில் என்ன இருந்தது என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது. பைக்குள் என்ன இருந்தது என்பதும் மர்மமாக உள்ளது. மேலும் இவர்கள் அங்கு ஆட்டோ ஒன்றில் வந்து சேர்ந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த ஆட்டோ டிரைவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : murderers ,Neyyattinkara ,
× RELATED ராஜஸ்தானில் கர்னி சேனா தலைவர் கொலை வழக்கில் 3 கொலையாளிகள் கைது