×

தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை போட்டியின்றி தேர்வு

காங்கயம், ஜன.12:  காங்கயம் ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 11 வார்டுகளில் அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி 4 வார்டுகளிலும், சுயேட்சைகள் 2 வார்டுகளிலும்  வெற்றி பெற்றது. இதில் சுயேட்சையாக வெற்றி பெற்ற மகேஷ்குமார் ஒன்றியத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அவருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலரான அய்யனாரும், ஆதரவு தெரிவித்து, சில நாள்களாக மகேஷ்குமார் அணியினருடன் தலைமறைவாக இருந்தார்.
தேர்தல் நாளான நேற்று அ.தி.மு.க.வினர் யாரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருந்த பகுதிக்கு வரவில்லை. தேர்தலின்போது மகேஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து, மேலும் ஒரு அ.தி.மு.க. கவுன்சிலரும் வந்திருந்தார். மகேஷ்குமாரோடு சேர்த்து மொத்தம் 8 கவுன்சிலர்கள் அவர் பக்கம் இருந்தனர். தேர்வு நடைபெற்றபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மகேஷ்குமார் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனவே, மகேஷ்குமார் ஒன்றியத் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசபிரபு அறிவித்தார். தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேஷ்குமாருக்கு அவரின் ஆதரவாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags : DMK ,AIADMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...