×

சித்திரைச்சாவடி அணையில் மண் அடைப்பு

கோவை, ஜன.12: கோவை நொய்யல் ஆற்றின் நீராதாரத்தில் 20 தடுப்பணை, 28 குளங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆலாந்துறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அமைந்துள்ளது. இந்த தடுப்பணையின் ஒரு பகுதியில் பாசன வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் மூலமாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, வேடப்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது. 50 ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்ட இந்த பாசன வாய்க்கால் பழுதாகி காணப்படுகிறது. இதை சீரமைக்க விவசாயிகள் பல முறை புகார் தெரிவித்து வந்தனர். இதற்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
கடந்த 2017ம்  ஆண்டில் நொய்யல் ஆற்றின் 16 ஷட்டர்களையும், சித்திரைச்சாவடி அணை மற்றும் பாசன வாய்க்காலையும் சீரமைக்க 2.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்தது. ஆனால் பணிகள் அறைகுறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக அணையின் நீர் தேக்க பகுதியில் மணல் போகி அளவு உரிய அளவில் காணப்படவில்லை. அணையின் நீர் தேக்க பரப்பு மணல் மற்றும் மண் மூடி காணப்படுகிறது. இதை சீரமைக்காமல், பராமரிப்பு பணி செய்ததுபோல் கணக்கு காட்டியிருப்பதாக தெரிகிறது.
சித்திரைச்சாவடி அணையில் இருந்து 4 கி.மீ. தூரத்திற்கு வேடப்பட்டி குளம் வரையுள்ள பாசன வாய்க்கால் தூர் வாரி சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குளத்தின் கரையில் 4 முதல் 5 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். இந்த வாய்க்கால் மூலமாக, தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் முழு அளவில் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணியும் முறையாக நடக்கவில்லை. நொய்யல் சீரமைப்பிற்கு வழங்கப்பட்ட தொகையில் முறையாக பணி நடத்தாமல் பெயரளவிற்கு பணி செய்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Soil blocking ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயம்