×

ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதால் விரக்தியடைந்த அதிமுகவினர் கரைவேட்டியை எரித்து சபதம்

கீழ்பென்னாத்தூர், ஜன.12: கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. இதனால் விரக்தியடைந்த அதிமுகவினர் ‘இனிமேல் அதிமுக கரைவேட்டியை கட்டமாட்டோம்’ என சபதம் எடுத்து அதனை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று பிடிஓ அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை உறுப்பினர் கு.அண்ணாமலை திமுகவில் இணைந்ததையடுத்து, திமுக வேட்பாளர் அய்யாகண்ணு 11 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாரதி 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் 6வது வார்டு ஒன்றியக்குழு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு லோ.பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவர் தேர்தலையொட்டி திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸில் வந்து நேற்று அவர் வாக்களித்தார்.

அதிமுக தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள், `அதிமுகவில் ஒற்றுமையில்லை. ஒற்றுமையாக இருந்திருந்தால் தலைவர் பதவியை பிடித்திருக்கலாம். எனவே கட்சியும் வேண்டாம், அதிமுக கரைவேட்டியும் வேண்டாம், இனிவரும் காலங்களில் இந்த வேட்டியை கட்டமாட்டோம்' எனக்கூறினர். இதையடுத்து, கட்டியிருந்த அதிமுகவினர் 5க்கும் மேற்பட்டோர் தங்களது அதிமுக கரைவேட்டியை கழற்றி சாலையில் தீயிட்டு எரித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதேபோல், நேற்று மாலை நடந்த துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் வாசுகி ஆறுமுகம் 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

Tags : takeover ,DMK ,union committee ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி