×

நெல்லை, தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கோலாகல கொண்டாட்டம்

நெல்லை, ஜன. 12: நெல்லை, தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.     விகேபுரம்: விகே.புரம் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு தாளாளர் ராபர்ட் தலைமை வகித்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பள்ளி விளையாட்டுச் செயலாளர் லியாண்டர் ஜோசப் சிறப்புரையாற்றினார். இதையொட்டி பள்ளி முதல்வர் பொன்மதி தலைமையில் ஆசிரியைகள், மாணவிகள் இணைந்து சர்க்கரைப் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த கோலாட்டம், கும்மியாட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர். கடையநல்லூர் நியூ கேம்பிரிட்ஜ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன. குறிப்பாக மாணவ, மாணவிகள் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருந்த சிலம்பாட்டம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. விழாவில் பள்ளித் தாளாளர் அக்பர் அலி, பள்ளி முதல்வர் கிருஷ்ணா கோகிலா தேவி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
   சுரண்டை: சுரண்டை எஸ்ஆர் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவுக்கு சிவடிப்ஜினிஸ் ராம் தலைமை வகித்தார்.  பள்ளிச் செயலாளரான முதல்வர் பொன் மனோன்யா முன்னிலை வகித்தார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம் துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் சர்க்கரைப் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் ஒருவொருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதையொட்டி பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை  உடற்கல்வி ஆசிாியா–்கள் இலங்காமணி, அருள் ஒளி செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிாியைகள் அபிதா, கோமதி ஒருங்கிணைத்து வழங்கினர்.

 தலைமையாசிரியர் மாரிக்கனி நன்றி கூறினார்.தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில்  சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  விழாவுக்கு  கல்லூரி  தாளாளர்  முருகேசன் தலைமை வகித்தார்.  கல்லூரி  முதல்வர் நல்லையா துரைராஜ்  முன்னிலை வகித்தார்.  கல்லூரி  வளாகத்தில் மாணவ, மாணவிகள்  கரும்பு காய்கறிகள்  படைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இதில் கல்லூரி  உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள்  கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இசை நாற்காலி, உறியடித்தல், புதையல் போட்டி, தண்ணீர் நிரப்புதல், போன்ற பல்வேறு  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற  மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளர் முருகேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.   புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட அறிவுரை வழங்கப்பட்டது. உழவர் தின சிறப்புகள் பற்றியும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு  விளக்கப்பட்டது. கல்லூரி  துணை முதல்வர் அனாமிகா நன்றி கூறினார்.

   புளியங்குடி: தை திருநாளாம் பொங்கலையொட்டி புளியங்குடி  கண்ணா மெட்ரிக் பள்ளியில்  சமத்துவப் பொங்கல் விழா, வீர விளையாட்டு விழா, மழலையர் பிரிவு மாணவர்களின் கலைப்பொருள் கண்காட்சி என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் சுபாஷ்கண்ணா தலைமை வகுத்தார். பள்ளியின் முதல்வர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகளை மாணவி மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். 5ம் வகுப்பு மாணவி ஹரிபிரியா, கபில் உள்ளிட்டோர் வாள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீரக்கலைகளை செயல்விளக்கத்துடன் அளித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மாணவர் பார்த்திபன் மற்றும் குழுவினரின் ‘ஒயிலாட்டம்’, மாணவிகளின் ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Equality Pongal Celebration ,Paddy ,Tenkasi District Educational Institutions ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...