×

குளித்தலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்

குளித்தலை, ஜன. 10: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி- கரூர் இடையே மிகப்பெரிய பழமையான ரயில் நிலையம் குளித்தலையில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து பல நகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதுமான அளவில் குளித்தலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. கரூர் மாவட்டத்தில் குளித்தலை ரயில் நிலையம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பாலக்காடு கோட்டத்தில் இருந்து இந்த ரயில் நிலையம் சில ஆண்டுகள் முன்பு சேலம் கோட்டம் கட்டுப்பாட்டில் வந்தது. குளித்தலை வழியாக மயிலாடுதுறை- திருச்சி, கரூர்- ஈரோடு, கோவை- பாலக்காடு, கொச்சி- சென்னை, மங்களூர்- மைசூர் உள்பட சுமார் 15க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன. இங்கிருந்து தினந்தோறும் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் சுமார் 1500 பேர், தினசரி பயணச்சீட்டு எடுப்போர் சுமார் 600 பேர், மூன்று மாத பயணச்சீட்டு பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் குளித்தலை ரயில்நிலையத்தில் இருந்து பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் ரயில்நிலையத்தில் பயணிகள் மற்றும் பயணிகளை வரவேற்க வருவோர் என ஆயிரக்கணக்கானோர் தினசரி வந்து செல்லும் இடமாக இருந்தாலும் ரயில் நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி தனியாக ரிசர்வேஷன் முன்பதிவு மையம் அமைத்து மற்றும் டிக்கெட் கொடுப்பதற்கு என தனியாக இடம் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16615 மற்றும் வண்டி எண் 16616 கோவையில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயில் குளித்தலை ரயில் நிலையத்தில் தினசரி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை ரயில்நிலையத்தின் தரத்தை உயரத்தி அனைத்து வாராந்திர ரயில்களும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
கோரிக்கை மனுவை பெற்று கொண்ட பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கோரிக்கை குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரியிடம் எடுத்து கூறி உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags : railway station ,Koodalai ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...