×

பொங்கல் பரிசு வழங்க அ.தி.முக.வினருக்காக பல மணி நேரம் மக்கள் காத்திருப்பு

ஈரோடு, ஜன.10: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் நேற்று முதல் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காலையில் இருந்தே ரேஷன் கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர். ஆனால், அந்தந்த பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் வந்து வழங்க வேண்டும் என்பதற்காக பலமணி நேரம் பொதுமக்களை காக்க வைத்தனர். இதனால், அவர்கள் அதிருப்தியடைந்தனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்படி, மாவட்டத்தில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 218 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 71.34 கோடி ரூபாயும், பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.14.84 கோடி மதிப்பீட்டிலும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புகளை அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 8.30 மணியில் இருந்து 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஈரோடு மாநகர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாலை 7.30 மணியில் இருந்தே பொதுமக்கள் காத்திருந்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க துவங்கியது. பல இடங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்கள் தவித்தனர். ஆனால், ரேஷன் கடைகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. பல இடங்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும், முன்னாள் கவுன்சிலர்களும் வந்து பொங்கல் பரிசு வழங்கும நிகழ்ச்சியை துவங்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களை காத்திருக்க வைத்தனர். பலமணி நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பெரியார்நகர் பகுதி அதிமுக செயலாளரும், முன்னாள் மண்டலக்குழு தலைவருமான மனோகரன் வந்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காக்க வைக்கப்பட்டனர். இதனால் வயதானவர்கள், பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.ஒரு சில கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் அதை ஒழுங்குப்படுத்த கூட ஆட்கள் இல்லாததால் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூளை, பெரியசேமூர், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க ஆளும்கட்சியினர் வருகைக்காக பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,`பொங்கல் பரிசு பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகமாக வருவார்கள் என தெரிந்திருந்தும் ரேஷன் கடைகளில் ஒரு பந்தல் கூட அமைக்காமல் உள்ளனர். இதனால், வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் வந்துதான் துவங்கி வைப்பார்கள் என கூறி ரேஷன் கடை ஊழியர்கள் எங்களை நீண்ட நேரமாக காக்க வைத்தனர். மாநகராட்சி பகுதி முழுவதுமே இதே நிலை தான் ஏற்பட்டது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆளும்கட்சியினர் வர வேண்டும் என்பதற்காக பல மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வைக்கவில்லை’ என்றனர்.

Tags : AIADMK ,Pongal ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...