×

வாழ்க்கை பிரச்னையை கல்வி தீர்ப்பதாக இருக்க வேண்டும்

அரியலூர், ஜன.10: நாம் கற்பிக்கும் கல்வி வாழ்க்கை பிரச்னையை தீர்க்கூடியதாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆண்டு விழாவில், அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.டி.சுமதி பேசினார்.அரியலூர் வெங்கிடகிருஷ்ணாபுரம் அடுத்த தனியார் பொதுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.டி.சுமதி கலந்து கொண்டு பேசியதாவது:ஒரு காலத்தில் எந்த பணியை தொடங்கினாலும் முதலில் இறைவனை வங்கி தொடங்குவோம். தற்போது அந்த பழக்கம் மாறி, காலையில் எழுந்தவுடன் செல்லிடப்பேசியை பார்த்துவிட்டு தான் பணியை தொடங்க வேண்டிய நிலைக்கு மாறியுள்ளோம். கல்வித்தரம் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நாளுக்கு நாள் நமது பண்பாடு, கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு நமது பெற்றோர்களும் காரணம். நாம் பட்ட கஷ்டங்கள் நம்முடைய பிள்ளைகளும் படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையானதை செய்துக்கொடுத்து வாழ்க்கை என்ன என்பதனை சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறோம். இதனால் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.

ஆடம்பரமாக இருப்பது அது வாழ்க்கையே கிடையாது. கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை தான் நமக்கு அனுபவத்தை தரும். எனவே மாணவர்கள் நாம் கற்பிக்கும் கல்வி வாழ்க்கை பிரச்னையை தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். செல்லிடப்பேசியை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாட்டின் கலாச்சாரத்தை பேணிக்க வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இவ்விழாவிற்கு அப்பள்ளியின் நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பெரம்பலூர் முதுநிலை வழக்குரைஞர் பாபு கலந்து கொண்டு பேசினார். பள்ளி முதல்வர் சர்மிளாபிரசாத் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...