×

வேலை நிறுத்த போராட்டம் 50 சதவீத கடை, தொழிற்சாலைகள் அடைப்பு

திருப்பூர்,  ஜன. 9: திருப்பூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடந்த வேலை நிறுத்தப்  போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 50 சதவீத கடைகள், தொழிற்சாலைகள்  அடைக்கப்பட்டிருந்தன.   புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,  அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை  தடுத்தல், வங்கிகள் இணைப்பை கைவிடுதல், சர்ச்சைக்குரிய குடியுரிமை உள்ளிட்ட  சட்டங்களை நீக்குதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும்  மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம்  (ஏ.ஐ.டி.யு.சி), இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்) உள்ளிட்ட 19  தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று  நடந்தது.  திருப்பூரில் இப்போராட்டத்திற்கு பல்வேறு தொழில் அமைப்புகள் ஆதரவு  தெரிவித்திருந்தன. இந்த ‘ஸ்டிரைக்’ காரணமாக, திருப்பூர் நகரிலுள்ள கடைகள்,  பேக்கரிகள், ஓட்டல்கள், ஜூவல்லரிகள் உள்ளிட்ட சுமார் 50 சதவீத வர்த்தக  நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல், 50 சதவீத பனியன் சார்ந்த  உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

அனுப்பர்பாளையம் பாத்திர  தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில்  பங்கேற்றதால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டது. பஸ்கள் வழக்கம் போல் ஓடின.  தனியார் பஸ்களில் ஒருசில பஸ்கள் மட்டும் ஓடவில்லை. இதேபோல் ஒரு சில  இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. எனினும், சில இடங்களில் பெட்டிக்கடைகள்,  இறைச்சிக்கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. நகரிலுள்ள 50 சதவீதம்  கடைகள், தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டிருந்ததால், சுமார் ரூ.35 கோடி  மதிப்பிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கும் என  தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.  இந்த போராட்டத்தையொட்டி, பஸ்  நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிரக்  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி,  திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்  போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், எல்.பி.எப்.மாவட்ட செயலாளர்  சிதம்பரசாமி, ஐ.என்.டி.யு.சி மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ் மாவட்ட  செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எப் மாவட்ட தலைவர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி  மாநில துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட 680பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி