×

போலி விசா, பணி நியமன ஆணையுடன் வெளிநாடு அனுப்பி வாலிபரிடம் 5 லட்சம் மோசடி; நண்பர் கைது

மீனம்பாக்கம்: போலி விசா, பணி நியமன ஆணையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வாலிபரிடம் 5 லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் மூர்த்தி (28). எலக்ட்ரீஷியன். சென்னை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது சக ஊழியர் சூளைமேட்டை சேர்ந்த டோமினிக் ராஜ் (29) என்பவரது பழக்கம் கிடைத்தது. எனவே இருவரும் நண்பர்களாக பழகினர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டோமினிக்ராஜ் நண்பர் மூர்த்தியிடம், ‘‘ஆர்மேனியா நாட்டில் நல்ல சம்பளத்தில் எலக்ட்ரீஷியன் வேலை உள்ளது. 5 லட்சம் கொடுத்தால் சேர்த்து விடுகிறேன்’’ என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய மூர்த்தி வட்டிக்கு கடன் வாங்கி 5 லட்சம் பணத்தை டோமினிக்ராஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டோமினிக்ராஜ் இரண்டு வாரம் கழித்து ஆர்மேனியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கான பணி நியமன ஆணை மற்றும் விசா ஆகியவற்றை மூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2018 அக்டோபர் மாதம் மூர்த்தி சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றார். பின்பு டெல்லியில் இருந்து ரஷ்யா வழியாக ஆர்மேனியா நாட்டில் உள்ள எரிவன் விமான நிலையத்தை சென்றடைந்தார். எரிவன் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மூர்த்தி வைத்திருந்த பாஸ்போர்ட், விசா மற்றும் பணி நியமன ஆணையை ஆய்வு செய்தனர். அப்போது விசா, பணி நியமன ஆணை ஆகிய இரண்டும் போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலையத்தை விட்டு அவரை வெளியில் செல்ல அனுமதிக்காமல் மீண்டும் ரஷ்யா வழியாக டெல்லிக்கு அனுப்பினர். அங்கிருந்து, மிகுந்த ஏமாற்றத்துடன் மூர்த்தி சென்னை வந்தடைந்தார்.

இதனால் விரக்தியடைந்த மூர்த்தி தன்னை ஏமாற்றிய டோமினிக்ராஜை பல இடங்களில் தேடினார். 2 மாத தேடலுக்கு பின்னர், டோமினிக்கை கண்டுபிடித்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு டோமினிக், ‘‘நான் வேறு ஒருவரிடம் பணம் கொடுத்துதான் பணி நியமன ஆணை வாங்கினேன். அவரை கண்டுபிடித்து பணத்தை வாங்கி தருகிறேன்’’ என கூறியுள்ளார். ஆனாலும் அவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததோடு நாளடைவில் மூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மூர்த்தி விமான நிலைய போலீசில் விரிவாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டோமினிக்ராஜை கைது செய்தனர்.



Tags : foreigner ,
× RELATED வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரிப்பு...