×

நிறுத்திவைக்கப்பட்ட 3 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் காங்-1, பாஜ-1

நாகர்கோவில், ஜன.9: குமரி மாவட்டத்தில் முடிவு அறிவிக்கப்படாத மூன்று வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்த  நிலையில் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் காங்கிரஸ், பாஜ தலா ஒரு வார்டுகளை கைப்பற்றியுள்ளது. குமரி மாவட்டத்தில் கணியாகுளம் ஊராட்சி 9 வது வார்டு வேட்பாளர் ராபின், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய குழு 9 வது வார்டு வேட்பாளர் அமமுகவை சேர்ந்த ராஜன் (சுயே), குருந்தன்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் 5 வது வார்டு வேட்பாளர் சுகந்தி (பா.ஜ) ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனால் இந்த 3 வார்டுகளில் மட்டும் ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தக்கலை அருகே புங்கறையில் உள்ள என்ஐ பாலிடெக்னிக் கட்டிடத்தில் ஒரே இடத்தில் வைத்து நேற்று நடத்தப்பட்டது. வேட்பாளர்கள், முகவர்கள் வருகை தந்திருந்தனர். முன்னதாக மேல்புறம், குருந்தன்கோடு மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டிகள், மின்னணு இயந்திரம் ஆகியவை வாகனங்களில் தக்கலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வாகனங்களில் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து அந்தந்த வேட்பாளர், முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குருந்தன்கோடு ஒன்றிய வார்டு எண்ணிக்கை ஆறு மேஜைகளில் முதலில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் குருந்தன்கோடு ஒன்றியம் 5 வது வார்டில் சுகந்தி (பாஜ) 650 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். காமராஜ் (காங்கிரஸ்) 300 ஓட்டுகள் பெற்றிருந்தார். அருமைராஜ் (சுயே) 207, ஆன்றனி ராஜ்(சுயே) 368, அமல்ராஜ் (சுயே) 417, ஜாண் ஜஸ்டஸ் (சுயே) 68, மோகன்ராஜ் (சுயே) 42, ஐயப்பன்பிள்ளை (சுயே) 142, செல்வராஜ் (சுயே) 184, அருமதாஸ் (சுயே) 33 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மேல்புறம் ஒன்றியம் 9 வது வார்டில் ஜஸ்டின் (காங்) 1810 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். பால்ராஜ் (தேமுதிக) 241, சந்திரகுமார் (சுயே) 667, வினோத்குமார் (சுயே) 119, ராஜன்(சுயே) 46, ராபி(சுயே) 108 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். கணியாகுளம் ஊராட்சி 9 வது வார்டில் ராபின், சசிகுமார், ரகுகுமார் என மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ராபின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

குருந்தன்கோடு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 11 வார்டுகளில் திமுக 1, காங்கிரஸ் 2 என்று இக்கூட்டணி 3 இடங்களிலும், அதிமுக 1, பா.ஜ 4 என்று இக்கூட்டணி ஐந்து இடங்களிலும், சுயேட்சை இரு இடங்களிலும் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்தனர்.  இதனால் சுயேட்சைகள் ஆதரவை பெறும் கட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை இருந்தது. தற்போது மேலும் ஒரு வார்டில் பாஜ வெற்றிபெற்றதின் வாயிலாக சுயேட்சைகள் ஆதரவு இன்றி பா.ஜ கூட்டணி யூனியன் தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேல்புறம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 வார்டுகளில் திமுக-1, காங்கிரஸ்-4, இந்திய கம்யூனிஸ்ட்-1, மார்க்சிஸ்ட்- 3 என்று திமுக கூட்டணி வசம் 9 வார்டுகள் இருந்தன. இங்கு சுயேட்சை ஒன்றும், பாஜ 2 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளது. இதனால் திமுக கூட்டணி தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை இருந்தது. தற்போது மேலும் ஒரு வார்டில் காங்கிரஸ் வெற்றிபெற்றதின் வாயிலாக கூட்டணி பலம் 10 ஆக உயர்ந்து தலைவர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றுவது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Cong-1 ,BJP-1 ,Panchayat Union ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...