×

பெரியார் பல்கலை., நிர்வாக குளறுபடிகளால் காலதாமதமாக வெளியிடப்படும் தேர்வு முடிவுகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓமலூர், ஜன.8:  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் 100 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. பல்கலைக்கழகத்தில் 29 ஆய்வுத்துறைகளும், தர்மபுரியில் முதுநிலை விரிவாக்க மையமும் இயங்கி வருகிறது. உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் 1.50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் இளநிலைப் பாடப்பிரிவில் 1,40,485 மாணவர்களும், முதுநிலைப் பாடப்பிரிவில் 19,089 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக துறைகள், முதுநிலை விரிவாக்க மையம் ஆகியவற்றில் 2,410 மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 2019ம் ஆண்டில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் நேற்று  இணையதளத்தில் வெளியிட்டார். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வரும் 23ம் தேதிக்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மறு கூட்டலுக்கு ₹300ம், விடைத்தாள் நகலினை பெற ₹350ம், முதுநிலைப் பாடப்பிரிவுக்கு ₹450ம் கட்டணமாக செலுத்த வேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக அறிவிப்பின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக குளறுபடிகள் மற்றும் பதிவாளர், தேர்வாணையர் இல்லாததால் ஜனவரி 1ல் வெளியிட வேண்டிய தேர்வு முடிவுகள், ஒரு வாரம் காலதாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பல்கலைக்கழக செயல்பாடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து உயர்கல்வி துறை செயலர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Periyar University ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை...