×

நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தல்

காரைக்கால், ஜன. 7: காரைக்காலில் பணியாற்றும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: புதுச்சேரி அரசின் கல்வி நிலையத்தில் பணிபுரியும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு மிக குறைந்த சம்பளமாக ரூ.6458 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ரொட்டிப்பால் ஊழியர்கள் தற்பொழுது தினக்கூலி ஊழியர்கள் போல் காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். கல்வி நிலையங்களில் பால் காய்ச்சும் வேலையுடன் மற்ற அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக முழு நேர தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ரொட்டிப்பால் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் என தொடர்ச்சியாக கோரி வருகிறோம். இந்நிலையில், தற்பொழுது வழங்கப்பட்டு வரும் குறைந்த அளவு ஊதியமான ரூ.6458 ம் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 4 மாதத்திற்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. மேலும், கல்வி நிலையத்திற்கு விடுமுறை மாதமான மே மாதத்திற்குரிய சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. இதனால், அந்த ஊழியர்கள் மே மாதத்தில் ஊதியம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாதத்திற்கான சம்பளத்தை உடனே வழங்கவும், முழு நேர பணியாற்றும் ரொட்டிப்பால் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றி அவர்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...