×

வேட்டி அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

புதுச்சேரி, ஜன. 7: புதுவை தலைமை செயலகத்தில் சர்வதேச வேட்டி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, நலிவடையும் நெசவு தொழிலை பாதுகாக்க வேட்டி அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தலைமை செயலர் அஸ்வனிகுமார் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில், யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினமாக அறிவித்து, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வேட்டிக்கு கிடைத்த உலக அங்கீகாரமாகும்.
 மத்திய அரசும் உலக வேட்டி தினத்தை கடைபிடிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, புதுச்சேரியில் சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்கள் ஜன.6ம் தேதி வேட்டி அணிந்து பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று புதுச்சேரி தலைமை செயலகத்தில் தலைமை செயலர் அஸ்வனி குமார், உள்ளாட்சித்துறை செயலர் அசோக் குமார், போக்குவரத்துத்துறை செயலர் ஸ்ரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர்.

இதுகுறித்து தலைமை செயலர் அஸ்வனி குமார் கூறுகையில், உலக வேட்டி தினத்தை நான் ஆவலாக எதிர்பார்த்து இருந்தேன். இத்தினத்தை மதிக்கின்றேன். நமது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு வசதியாக இருக்கக்கூடியது வேட்டி. கிராமப்புற வாழ்க்கையில் வேட்டி அணிவது வழக்கமாக உள்ளது. வேட்டி நமது நாட்டின் கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது. வேட்டியில் பல்வேறு புதுமைகள் வந்துவிட்டதால் எந்த ஒரு சிரமமும் ஏற்படாது. உலக வேட்டி தினமான இன்று (நேற்று) வேட்டி அணிய முடியாதவர்கள் வேறு ஒரு தினத்தில் வேட்டி அணிய வேண்டும். வேட்டி அணிவது நம்மை இந்தியனாக காட்டுகின்றது. வேட்டி அணிபவர்கள் நாட்டின் தூய குடிமகன்கள் ஆவார்கள். மேலும், நலிவடையும் நெசவு தொழிலை பாதுகாக்க வேட்டி அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் புதுச்சேரி உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் அசத்தலாக ேநற்று வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...