×

விமான நிலையத்தில் நள்ளிரவு பரபரப்பு ஓடும் காரில் திடீர் தீவிபத்து

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஓடிக்கொண்டிருந்த காரில் திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் மற்றும் 2 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் தம்பிதுரை (44), கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு  தனது காரில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து, அங்கிருந்த பயணிகள்  இருவரை ஏற்றிக்கொண்டு சென்னை அரும்பாக்கத்திற்கு புறப்பட்டார். விமான நிலையத்தின் 2வது கேட்டில் இருந்து 3வது கேட் அருகே கார் சென்றபோது, திடீரென காரின்  இன்ஜின் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதை பார்த்த டிரைவர் தம்பிதுரை, அவசரமாக காரை ஓரம் கட்டினார். பின்னர், காரில் இருந்து டிரைவர் மற்றும் பயணிகள் இருவர் அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் தீப்பற்றி கார் எரிய தொடங்கியது. உடனே அங்கு நின்ற விமான நிலைய பதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரவு விடுதியில் பணியாற்றியவர்கள் அவசரமாக விரைந்து வந்து தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதற்கிடையே கார் தீப்பிடித்ததை பார்த்து, அருகில் நின்றிருந்தவர்கள் தங்கள் கார்களுக்கு  தீ பரவி விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக தங்களது காரை எடுத்து தூர நிறுத்தினர். பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய ஊழியர்களும் எடுத்த துரித நடவடிக்கையால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விமான நிலைய போலீசார் விரைந்து வந்து கார் டிரைவர் தம்பிதுரையிடம் விசாரணை நடத்தினர். காரில் வந்த 2 பயணிகளை மற்றொரு காரில் ஏற்றி அனுப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : fire ,airport ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா