×

திருவண்ணாமலை ஒன்றியம் ஆடையூர் ஊராட்சியில் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு

திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை ஒன்றியம், ஆடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவர், சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.திருவண்ணாமலை ஒன்றியம் ஆடையூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், கலைவாணி, அவில்தார், குமார், தனவேல், தேவதாஸ் ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டது. அப்போது, கலைவாணி, தேவதாஸ் ஆகியோர் தலா 906 வாக்குகள் பெற்றனர்.இரண்டு வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால், மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இரண்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான பிடிஓ அண்ணாதுரை குலுக்கலை நடத்தினார். இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் தனித்தனி சீட்டில் எழுதி போடப்பட்டு குலுக்கப்பட்டன. அதில், வேட்பாளர் கலைவாணி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கலைவாணியிடம் தேர்தல் அதிகாரி வழங்கினார்.

Tags : union ,Thiruvannamalai ,Adoor ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...