×

ஆரணியில் பரபரப்பு தேர்தல் அலுவலரை திமுகவினர் முற்றுகை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்

ஆரணி, ஜன.3: ஆரணியில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்தல் அலுவலரை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 30ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதற்கான வாக்கு எண்ணும் பணி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டது.மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சம்புவராயநல்லூர், சத்திரம்பட்டு, நடுக்குப்பம், காமக்கூர் பகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து கொண்டிருந்த நிலையில், திமுக சார்பில் ஒன்றியத்தை சாராத 2 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்கு திமுகவினர், முகவர்களாக யாரை வேண்டுமானலும் நியமிக்கலாம் என்று பதிலளித்ததை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கிருந்து தகராறில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், ‘வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்’ என்று திமுக மாவட்ட செயலாளர் சிவனாந்தம் புகார் தெரிவித்தார்.
உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனுவாசன், ராமசேகரகுப்தா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டார். அதேபோல் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியது ஏன்? வாக்கு பதிவான பெட்டிகளை குறிப்பிட்ட நேரத்துக்கு சம்பந்தப்பட்ட அறைக்கு கொண்டு செல்லாமல் தாமதம் செய்தது எதற்கு? போதிய உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகாரிகளுக்கு செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் என்ன? என்று கலெக்டரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

இதற்கிடையில் வெற்றிபெற்ற திமுகவின் 2 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சான்றிதழ் வழங்க விடாமல் அதிமுகவினர் தடுத்தனர். மேலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையை முற்றுகையிட்டனர்.
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தினர். மேலும் அறையை மூடிவிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அலுவலகம் நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வெற்றியை அறிவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : siege election officer ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்