×

குமரி மாவட்ட பஞ்சாயத்து முடிவுகள் அதிமுக-4, பா.ஜ- 2, காங்கிரஸ் -5

நார்கோவில், ஜன.3: குமரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிக இடங்களை அதிமுக கூட்டணி கைப்பறியது. அதிமுக 4, காங்கிரஸ் 5, பா.ஜ 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 11 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் அகஸ்தீஸ்வரத்தில் 6 பேரும், தோவாளையில் 4 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 8 பேரும், குருந்தன்கோட்டில் 5 பேரும், தக்கலையில் 4 பேரும், திருவட்டாரில் 4 பேரும், கிள்ளியூரில் 4 பேரும், முன்சிறையில் 13 பேரும், மேல்புறத்தில் 5 பேரும் போட்டியிட்டனர். அந்த வகையில்மொத்தம் 53 பேர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் களத்தில் இருந்தனர். மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடைபெற்ற மேல்புறம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முதன் முதலாக முழுமையாக முடிவுக்கு வந்தது. அதில் வார்டு எண் 1: மாவட்ட ஊராட்சி ஒன்றாவது வார்டுக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அம்பிளி 13,011 ஓட்டுகள் பெற்று, 113 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அடுத்து வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் 12 ஆயிரத்து 898 வாக்குகளை பெற்றிருந்தார். அம்பிளி, முன்னாள் மேல்புறம் யூனியன் சேர்மனாக பதவி வகித்தவர் ஆவார்.

வார்டு 2: திருவட்டார் ஒன்றிய பகுதியில் வருகின்ற 2ம் வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் செலினா மேரி 12,105 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜ வேட்பாளர் தீபாபிரசாத் 11,929 வாக்குகள் பெற்றிருந்தார். புஷ்பலீலா 8584 வாக்கு பெற்றார். முன்னதாக வாக்குவித்தியாசம் 176 இருந்த நிலையில் பா.ஜ வேட்பாளர் தரப்பில் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செலினா மேரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படட்டது.
வார்டு 3: தோவாளை யூனியன் பகுதியில் வருகின்ற இந்த 3ம் வார்டில்  அதிமுக வேட்பாளர் பரமேஸ்வரன் 16,427 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் சீனிவாசன் 14,899 வாக்குகள் பெற்றிருந்தார்.
வார்டு 4: முன்சிறை ஒன்றியத்தில் வருகின்ற மாவட்ட பஞ்சாயத்து 4 வது வார்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் லூயிஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் 11 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் வேட்பாளர்சஜிலா கிரேசி 9136 வாக்குகளும், பா.ஜ வேட்பாளர் கிஜி திலகவதி 8229 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

வார்டு 5: முன்சிறை ஒன்றியத்தில் பாஜ வேட்பாளர் ராஜேஷ்பாபு 10,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜார்ஜ் ராபின்சன் 9842 வாக்குகள் பெற்றிருந்தார். வார்டு 6: கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருகின்ற மாவட்ட ஊராட்சி வார்டு 6 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபி 10 ஆயிரத்து 917 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் லீலா 9292 வாக்குகளும், பெவி (அதிமுக) 6941 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1790 வாக்குகளும் பெற்றிருந்தனர். மொத்தம் 30,114 வாக்குகள் பதிவானதில் 1232 வாக்குகள் செல்லாதவை ஆகும். தபால் ஓட்டுகளில் காங்கிரஸ் 24, திமுக 10, அதிமுக 12, நாம் தமிழர் 4 வாக்குகளையும் பெற்றிருந்தது. வார்டு 7: தக்கலை ஒன்றியத்தில் திருவட்டார் ஒன்றியம், குருந்தன்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஷர்மிளா ஏஞ்சல், திமுக சார்பில் பெனடிக்ட் ரோஸ், அதிமுக சார்பில் கோல்டி சோபியா,  சுயேட்சையாக சுசீலா ஸ்டாரி ஆகியோர் போட்டியிட்டனர். முதலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷர்மிலா ஏஞ்சல் 9789 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கோல்டி சோபியா 9032 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் பெனடிக்ட் ரோஸ் மூன்றாம் இடம் பிடித்தார்.

வார்டு 8: குருந்தன்கோடு, தக்கலை ஒன்றிய பகுதியில் வருகின்ற இந்த வார்டில் அதிமுக சார்பில் மெர்லின்தாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டைமண்ட் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜாண் புஷ்பதாஸ், நாம் தமிழர் ரீகன் ரொனால்ட் பிராங்கிளின், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் அந்தோணி முத்து போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் மெர்லின் தாஸ் 10,885 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஜாண் புஷ்பதாஸ் 8175, ரீகன் ரொனால்டு பிராங்கிளின் 5420, அந்தோணிமுத்து 2218, டைமண்ட் அருள் 1607 வாக்குகள் பெற்றிருந்தனர்.  

வார்டு 9: குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம் பகுதிக்குள் வருகின்ற 9 வது வார்டு பகுதியில் 13,871 வாக்குகள் பெற்று பா.ஜ வேட்பாளர் சிவகுமார் வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 10,184 வாக்குகள் பெற்றார்.
வார்டு 10: ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் வருகின்ற இந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் தங்கம், அதிமுக சார்பில் ஜாண்சிலின் விஜிலா ஆகியோர் போட்டியிட்டனர்.  14 ஆயிரத்து 63 வாக்குகள் பெற்று ஜாண்சிலின் விஜிலா (அதிமுக) வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தங்கம் 12,433 வாக்குகளும், நாம் தமிழர் சமினா 5260 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

வார்டு 11: அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாம்மோகன் ராஜ், அதிமுக சார்பில் பேராசிரியர் நீலபெருமாள் போட்டியிட்டனர்.  வாக்கு எண்ணிக்கையில் இருவரிடமும் இழுபறியே நிலவி வந்தது. இறுதியில் நீலபெருமாள் (அதிமுக) வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 10,244 வாக்குகள் கிடைத்திருந்தது. சாம்மோகன்ராஜ் 9,574 வாக்குகள் பெற்றிருந்தார்.

Tags : district panchayat ,Kumari ,ATMK-4 ,Congress-5 ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...