×

நாகர்கோவில் மாநகராட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை இறக்குவதில் திடீர் சிக்கல் தீயணைப்பு துறையினர் சரி செய்தனர்

நாகர்கோவில், மே 22: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை தொடர்ந்து, நேற்று (21ம்தேதி) நாடு முழுவதும் ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. குமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடி கம்பம் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சுமார் 12 மீட்டர் உயரத்தில், மோட்டார் வசதியுடன் இயங்கும் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்திலும் நேற்று காலை தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான மோட்டார் இயக்கி, கொடி கம்பத்தை சற்று கீழே இறக்குவதற்கான பணிகள் நடந்தன. ஆனால் கொடி கீழே இறங்க வில்லை. மோட்டார் நன்றாக இயங்கிய நிலையில், கொடி கீழே இறங்க வில்லை. அப்போது கொடியின் ஒரு பகுதி கொடி கம்பத்தின் உச்சியில் உள்ள இடிதாங்கி கருவியில் சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அலுவலகம் வந்தனர். பின்னர் தீயணைப்பு துறை வீரர், ஏணி மூலம் கொடி கம்பத்தின் உச்சியை அடைந்து, சிக்கி இருந்த கொடியினை அகற்றினர். இதில் கொடி எதுவும் சேதம் அடைய வில்லை என்பதால், தொடர்ந்து கீழே இறக்கப்பட்டு அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் 24 மணி நேரமும் கொடி பறந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாகர்கோவில் மாநகராட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை இறக்குவதில் திடீர் சிக்கல் தீயணைப்பு துறையினர் சரி செய்தனர் appeared first on Dinakaran.

Tags : fire department ,Nagercoil Corporation ,Nagercoil ,Union Home Ministry ,President ,Ibrahim Raisi ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்