×

பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிழப்பு

விருத்தாசலம், டிச. 3: விருத்தாசலம் அருகே பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). பொக்லைன் இயந்திரம் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், தற்போது பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசவத்துக்காக கடந்த 27ம் தேதியன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரியாவை சேர்த்துள்ளனர். அன்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்பு அறுவை சிகிச்சை முடிந்ததும் பிரியாவை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கையில் இருந்து வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காமல் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலி
யுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் இங்கு மருத்துவம் பார்க்க முடியாது, இவ்வளவு தான் பார்க்க முடியும் நீங்கள் வேண்டுமென்றால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளியுங்கள் எனக் கூறி உள்நோயாளியாக இருந்த பிரியாவை எடுத்துச் செல்ல கூறியுள்ளனர். இதையடுத்து தங்கள் சொந்த செலவில் பிரியாவை தனியார் வாகனம் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது புதுச்சேரி மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது வயிற்றில் ஏதோ மர்மபொருள் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை ஆராய்ந்து பார்த்த போது அது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட துணி என்பது தெரியவந்தது. பின்பு மீண்டும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்த துணியை எடுத்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்துள்ளார். மேலும் பிரியாவின் வயிற்றுக்குள் துணி வைத்து தைக்கப்பட்டது காரணமாக தொற்று உண்டாகி அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தான் அவர் உயிரிழந்தார் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் அறிக்கை தந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் உறவினர்கள் பிரியாவின் உடலை வாங்க மறுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைமுன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரியாவுக்கு பிறந்த குழந்தையை மருத்துவமனை வாயில் முன்பு படுக்க வைத்துக்கொண்டு அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து அரசு மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, விருத்தாசலம் டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்  உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : stitches ,
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்