×

வெளி விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி எப்போது முடியும்?

காரைக்கால், ஜன. 3: காரைக்கால் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு வெளி விளையாட்டு அரங்கத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர விளையாட்டு ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம்  செலுத்தினாலும் கூட அவர்களுக்கான பயிற்சி மற்றும் களம் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. மாநில, தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க காரைக்கால் மாவட்ட இளைஞர்கள், மாணவர்களிடையே ஆர்வம் இருக்கிறது. ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை  விடுத்திருந்தனர்.     இதையடுத்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது.  10 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் ஏனோதானோ என திறக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள மைதானத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கென வெளி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக  அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக வெளி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, வெளி விளையாட்டு அரங்கம் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு புதர்கள் வளர்ந்து  காட்சி அளிக்கிறது. பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்களும் வலம் வருகிறது. ஆபத்தான நிலையில் பூசணி செடி வளர்ந்து பூ பூத்துள்ளது இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக  டெண்டர் விடப்பட்டு, ஓடுதளம் அமைக்கும் பணி குழி வெட்டியதோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் மழை நீர் ஆறு போல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரில் பூச்சி, புழுக்கள் உருவாகியுள்ளது. கழுகுகள் அதனை பிடித்து செல்கிறது. மேலும் அமரும் வகையில் கட்டப்பட்டு வந்த 2 கேலரிகளும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.      புதுச்சேரி அரசு வெளிவிளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக போதிய நிதியை ஒதுக்கி,  புதர்களை அகற்றி, ஒட்டப்பயிற்சிக்கான தளத்தை உடனே அமைத்து வெளி விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : stadium ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...