×

காலிங்கராயன் பாசனப்பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்

ஈரோடு, ஜன.3: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களும் பாசன வசதி பெற்று வருகிறது. நடப்பாண்டு பருவமழை ஓரளவுக்கு பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அனைத்து பாசனங்களுக்கும் முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் காலிங்கராயன் பாசனப்பகுதியில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், 9 ஆயிரத்திற்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, காலிங்கராயன் பாளையம், பி.பெ. அக்ரஹாரம், வைராபாளையம், சாவடிபாளையம் போன்ற பகுதியில் நெல் பயிர்கள் அறுவடைக்கு காத்திருந்தது. இதைத்தொடர்ந்து காலிங்கராயன் பாசனப்பகுதியான ஈரோடு வைராபாளையத்தில் நேற்று காலை விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள நெல்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இது குறித்து அறுவடை பணியில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மழையும், பாசன தண்ணீரும் இந்த ஆண்டு சீராக இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்தது. இதனால், இந்த ஆண்டு நெல் அறுவடை விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசு காலிங்கராயன் பாசனத்தில் அறிவித்துள்ள 3 நெல் கொள்முதல் நிலையங்களையும் விரைந்து திறக்க வேண்டும்.
ஏப்.30ம் தேதி வரை தண்ணீர் விநியோகம் இருப்பதால் மீண்டும் நெல் சாகுபடியில் ஈடுபட உள்ளோம், என்றார்.

Tags : Kalingarayan ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...