×

ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு

ஊட்டி,  டிச.30: நீலகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக ஊட்டி, கூடலூர்  ஒன்றியங்களில் இன்று 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக  வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பலத்த பாதுகாப்புடன்  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ளாட்சி  தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்தது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி  மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 6  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்,  35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம்  493 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இறுதி  வேட்பாளர் பட்டியலின்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 89 பேர்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 404 பதவிகளுக்கு 1479 பேர் களத்தில்  உள்ளனர்.

இதில் முதற்கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி  ஒன்றியங்களில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. இதில் 65.87 சதவீதம்  வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி  ஒன்றியங்களுக்கு உட்பட்ட இத்தலார், உல்லத்தி, எப்பநாடு, கக்குச்சி, கடநாடு,  கூக்கல், தும்மனட்டி, தூனேரி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, பாலகொலா,  முள்ளிகூர், மேல்குந்தா மற்றும் சேரங்காடு, நெலாக்கோட்டை, மசினகுடி,  முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதன்படி  216 ஊராட்சி வார்டு உறுப்பினர், 18 ஊராட்சி தலைவர், 37 ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர், 4 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கு உறுப்பினர்களை  தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று 30ம் தேதி நடக்கிறது. இந்த இரு  ஒன்றியங்களில் 40க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு  உள்ளன.

 இங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்படுவதுடன் வெப்  ஸ்ட்ரீமிங், வீடியோ பதிவு மற்றும் நுண் பார்வையாளர்களை கொண்டு கண்காணிப்பு  மேற்கொள்ளப்பட உள்ளது.  தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கான 3வது கட்ட பயிற்சி நடந்தது. தொடர்ந்து  ஊட்டி,  கூடலூர் ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள், அழியாத  மை, வாக்குசீட்டுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் செய்யப்பட்டு அவை  பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. பொருட்களோடு  சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களும்
சென்றனர். இதனை மாவட்ட கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். 2ம் கட்ட தேர்தல் நடைபெற  உள்ள ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் 1  எஸ்.ஐ., 2 காவலர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர  தமிழ்நாடு சிறப்பு காவல் படை, அதிரடி படையினர் என ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில்  பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது.

 தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ஊட்டி,  கூடலூர் ஒன்றியங்களில் நாளை (இன்று) வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் 40  பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு வெப் ஸ்டீரிமிங், நுண்  பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளது. தொலைதூரங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள்  சென்று வாக்களிக்க வசதியாக போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

Tags : Ooty ,Gudalur Unions ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...