திருப்பூர், டிச.30: திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில் சிதலமடைந்துள்ள பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் கொங்கு மெயின் ரோடு குமரன் ரோட்டில் துவங்கி 6 கி.மீ. பயணித்து பிச்சம்பாளையம் புதுார் புதிய பஸ் நிலையத்தை அடைகிறது.
இருபுறம் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நூற்றுக்கணக்கான வணிக வளாகங்கள், பள்ளிகள், தங்கும் விடுதிகள், பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் நிறைந்த திருப்பூர் மாநகரின் முக்கிய ரோடாகும். இந்த ரோட்டில் தினமும் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கிறது. ரோட்டின் மையப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய்கள் செல்லும் பகுதியில் அடைப்புகளை சரிசெய்ய பல்வேறு இடங்களில் ஜங்சன் பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரோட்டின் மைய்யப்பகுதியில் உள்ளதால் அடிக்கடி சிதலமடைகிறது. இதை மாநகராட்சி சார்பில் சரி செய்வது வழக்கம்.
பாதாள சாக்கடை கால்வாயை சரிசெய்ய பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன பாதாள சாக்கடைகளை விரைவாக சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரோட்டில் கட்டுமானப்பொருட்கள் சிதறிக்கிடக்கிறது. எனவே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கொங்கு மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடித்து சீரான போக்குவரத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விரும்புகின்றனர்.