×

வணிக ரீதியாக ஜல்லிக்கட்டு நடத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திருப்பூர், டிச.30: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை தனியார் அமைப்பு வணிக ரீதியாக கடந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என  கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக கிராமங்களில் நடந்து வருகிறது. காலப்போக்கில் நகர் பகுதிகளிலும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் முதன் முறையாக கடந்த 2018 ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் இணைந்து அலகுமலை கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியது. போட்டியை காண கோவை, ஈரோடு, கரூர்,திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர் குடும்பத்துடன் வந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்து பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் போட்டியை காண முடியாமல் வெளியே தவித்தனர்.

இதையறிந்த மாட்ட நிர்வாகம் போட்டியை காண 30 நிமிடங்கள் நிர்ணயம் செய்து பார்வையாளர்களை வெளியேற்றி புதிய பார்வையாளர்களை உள்ளே அனுமதித்தனர். இதனால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பொது மக்கள் அனைவரும் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான நன்கொடைகள் வரவு, செலவு ஆகியவை குறித்து ஜல்லிக்கட்டு குழுவினர் முன்னிலையில் வெளிப்படுத்தினர். கடந்த 2019 ம் ஆண்டு தனியார் அமைப்பினர் அலகுமலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியை காண பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் விற்பனை செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தை முன்னிலைப்படுத்தவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதாக கூறி தனியார் தொழில் நிறுவனங்களிடம்  நன்கொடை பெற்றனர்.  மாடுபிடி வீரர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பரிசுகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.  போலீசார், ஊர்காவல் படையினர், டாக்டர்கள், செவிலியர்கள், கால்நடை மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்கள், தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு வீரர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு முறையான உணவு, குடிநீர், எரிபொருள் செலவு உட்பட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை.

வாடிவாசலை விட்டு வெளியேறிய காளை ஒன்று கால்வாயில் விழுந்து உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை காண டோக்கன் விற்பனையால் யாரும் வாடிவாசலை விட்டு வெளியேறவில்லை. இதனால், பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காணமுடியாமல் கவலைப்பட்டனர்.  திருப்பூர் மாவட்டத்தில் 2020 ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமுழுக்க மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜல்லிகட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் மட்டுமே நடத்த வேண்டுமென அரசு உத்தரவு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா குழு அமைத்து முறையாக நடத்த வேண்டும், பாரம்பரிய ஜல்லிகட்டு போட்டியை வணிக ரீதியாக நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது. பார்வையாளர்கள் சுழற்சி முறையில் இலவசமாக அனுமதிக்கப்பட்டு அனைவரும் நேரில் பார்க்கும் வகையில் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். 

Tags : activists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...