×

ஆரோவில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை

வானூர், டிச. 30: வானூர் அருகே கோயில் விழா பணிகளில் ஈடுபட்டிருந்த ஆரோவில் ஊழியர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (44). இவர் ஆரோவில்லில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (38). இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் விழாவுக்காக நடைபெற்ற பணிகளில் சங்கர் கலந்து கொண்டு மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுமார் 11.30 மணியளவில் அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி மின் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், பைக்கை நிறுத்திவிட்டு மின்கம்பத்தில் இருந்த சங்கர் மீது கல் வீசி தாக்கினர். இருப்பினும் சங்கர் ஏணியில் இருந்து கீழே இறங்காமல் மேலேயே நின்றிருந்ததால் அவர்கள் 3 பேரும் ஏணியை பிடித்து இழுத்துள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கரை அக்கும்பல் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அவர்கள் வந்த பைக்கிலேயே மீண்டும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்த போது சங்கர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரோவில் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சங்கரின் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து, இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். போலீசார் விசாரணையில், அதே பகுதியில் உள்ள கோட்டக்கரை பகுதியை சேர்ந்த கமல் என்பவருக்கும், ராயப்பேட்டையை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இஸ்மாயில், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடனும், இடையன்சாவடியை சேர்ந்த சில வாலிபர்களுடனும் வந்து மீண்டும் கமலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கமலுக்கு ஆதரவாக சங்கர் பஞ்சாயத்து பேசியுள்ளார். இதனால் அவர்கள், சங்கர் மீது விரோதத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாகவே சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரோவில் பகுதியில் கடந்த 20 வருடங்களாக பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள், தாதா மணிகண்டன் மற்றும் அவரது எதிரியான ராஜ்குமார் கோஷ்டிகளால் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாதா மணிகண்டன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். அதிலிருந்து ஆரோவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமின்றி இருந்து வந்த நிலையில் தற்போது சங்கர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Auroville ,
× RELATED ஆரோவில் உதயதின விழாவில் நெருப்பு...