×

விருத்தாசலம் அருகே சத்துணவு அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிய பொறுப்பாளர்

விருத்தாசலம், டிச. 30: விருத்தாசலம் அருகே முருகன்குடியில் சத்துணவு அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிய சத்துணவு பொறுப்பாளரிடம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் விசாரணை மேற்கொண்டார். தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் நல்லூர் ஒன்றியம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியான பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த முருகன்குடி அருகே சென்றபோது நெடுஞ்சாலையின் ஓரமாக லாரியிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கப்படுவதை பார்த்து காரை நிறுத்தினார்.

தொடர்ந்து அரிசி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தியபோது, அப்பகுதியில் வசிக்கும் கபிலன் என்பவரது மனைவி கலையரசி(34), என்பவர் அருகே உள்ள காரையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருவதும், அப்பள்ளிக்கூடத்திற்கு சத்துணவு சமையலுக்கான அரிசி, பருப்பு, எண்ணெய் வகை ஆகியவைகளை கொண்டு செல்வதற்கு பள்ளிக்கூடத்தில் உள்ள சத்துணவு கூடம் பழுதாகி உள்ளதாலும், தற்போது அங்கு வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளதாலும், இதனால் அங்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையில் தனது வீட்டில் இறக்கி வைத்து பின்னர் பள்ளிக் கூடத்திற்கு கொண்டு செல்வதற்காக வீட்டில் இறக்கி வைத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய சப்-கலெக்டர் பிரவீன்குமார், இதுபோன்று அரசாங்க பொருளை வீட்டில் வைக்கக்கூடாது, வேண்டுமென்றால் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்து வரலாம் என அவர்களுக்கு அறிவுரை வழங்கி அதே அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி மீண்டும் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Vrithyasalam ,
× RELATED விருத்தாசலம் அருகே சாலை வசதி கேட்டு...