×

விருத்தாசலம் அருகே சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்

விருத்தாசலம், மார்ச் 4: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள கோ.ஆதனூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தெற்கு பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட பகுதியில் கடந்த 50 ஆண்டு காலமாக சாலை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில்  தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையை கடந்து சென்று வருகிறார்கள். இதனால் மழைக்காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியில் செல்ல முடியாத சூழ்நிலையில் கடுமையான அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதற்கிடையே சாலைவசதி செய்து தரக்கோரி ஆதனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மற்றும் மனுக்கள் அளித்தும் போராடி வந்தனர். ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் நீண்டகாலமாக அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் இதுவரை சாலை அமைக்கவில்லை. ஆனால் சாலை அமைத்தது போல் பொய்யான கணக்கு எழுதுவதற்கு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே சாலை அமைப்பதற்கான நூறு சதவீத உறுதியை தந்தால்தான் மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை வசதியை ஏற்படுத்தித் தருவதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வட்ட குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவஞானம், ஜீவானந்தம், கலைச்செல்வன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட  கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Communist Party of India (Marxist) ,Vrithyasalam ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...