×

சாலையோர தள்ளுவண்டி உணவகங்களுக்கும் உரிமம் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதிசெய்ய

வேலூர், டிச.30: தரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில் சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகளுக்கும் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும், என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை 2006ன் படி கடந்த 2011ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்புத்துறை இயங்கி வருகிறது. இந்த துறையின் மூலமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள், உணவு வகைகள் ஆகியவற்றுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.அதாவது, சில்லறை விற்பனையாளருக்கு உரிமக் கட்டணமாக ஆண்டுக்கு ₹2,000 ஆயிரமும், தயாரிப்பாளர்கள் உற்பத்திக்கு நாளொன்றுக்கு ஒரு மெட்ரிக் டன் அளவில் ₹3000மும், ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்டதாக இருந்தால் ₹5ஆயிரமும் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஓட்டல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு துறை வழங்கிய உரிமத்துடன் உணவு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தள்ளுவண்டி கடைகளில் காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கலும், மதிய வேளையில் தயிர், லெமன், புளி, தக்காளி, வெஜ்பிரியாணி உள்ளிட்ட கலவை சாதங்களும், இரவு நேரத்தில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒருசில தள்ளுவண்டி கடைகளில் மீன், கறிக்குழம்பு சாதம் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் பிளாஸ்டிக் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும், என்று விதி உள்ளது. ஆனால் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் அதனை பின்பற்றுவதில்லை.

சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் மாசு படிந்த புழுதிக்காற்று தள்ளுவண்டி கடைகளில் உள்ள உணவுகள் மீது படிந்து அசுத்தமாகிறது. இதனை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு வயிற்றுபோக்கு, ஒவ்வாமை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.தள்ளுவண்டி கடைகள் மூலமாக தரமான உணவுகள் விற்கப்படுவதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கையை முறைபடுத்தி உணவுகள் வழங்க உரிமம் பெற கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தள்ளுவண்டி கடைகளுக்கான உரிமம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், அதனை தள்ளுவண்டி உணவுக்கடை உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை. இந்நிலையில், பெரு நிறுவன ஓட்டல்களில் உணவு விற்பனைக்கு உரிமம் மற்றும் பதிவு உள்ளதுபோல், தள்ளுவண்டி உணவுக் கடைகளுக்கும் தற்போது உரிமம் கட்டாயமாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால் தள்ளுவண்டி கடைகளில் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும். எனவே, தள்ளுவண்டி கடைகளில் உணவுகள் விற்போர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம்’ என்றனர்.

Tags : Food Safety Department ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...