×

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் அரியலூர் மாவட்டத்தில் 81.75 சதவீதம் வாக்குப்பதிவு

அரியலூர், டிச. 28: முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம் முழுவதும் 81.75 சதவீத வாக்குகள் பதிவானது.அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்கள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 1662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நேற்றும், வரும் 30ம் தேதி இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 5,36,976 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.இதில் அரியலூர் ஒன்றியத்தில் 168 வாக்குச்சாவடி மையங்களுக்கு 387 வாக்குப்பதிவு பெட்டிகள், திருமானூர் ஒன்றியத்தில் 190 வாக்குச்சாவடி மையங்களுக்கு 449 வாக்குப்பதிவு பெட்டிகள், செந்துறை ஒன்றியத்தில் 164 வாக்குச்சாவடி மையங்களுக்கு 381 வாக்குப்பதிவு பெட்டிகள் மற்றும் 72 வகையான வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களும் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.

உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 522 வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணியில் இருந்தே விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வாலாஜாநகரத்தில் கலெக்டர் ரத்னா, செந்துறை அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் (சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்) திருமாவளவன் வாக்களித்தனர்.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்குள் அனைத்து பகுதிகளிலும் 50 சதவீதத்தை தாண்டியது. அரியலூர் மாவட்டம் முழுவதும் 2,67,089 வாக்காளர்களில் 2,18,348 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி அரியலூரில் 84.89 சதவீதம், திருமானூரில் 80.30 சதவீதம், செந்துறையில் 80.33 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதன்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் 81.75சதவீத வாக்குகள் பதிவானது.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...