×

பாஜகவுக்கு வாக்களித்தது தவறு என மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்

புதுச்சேரி, டிச. 29:  மோடியும், அமித்ஷாவும் நாட்டை பாதாளத்தில் தள்ளிவிட்டனர். பாஜகவுக்கு வாக்களித்தது தவறு என மக்கள் இப்போது உணர தொடங்கி விட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசினார். காங்கிரஸ் கட்சியின் 135ம் ஆண்டு உதய தின விழா புதுச்சேரி மாநில கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய செயலாளரும், புதுச்சேரி மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கேக் வெட்டினர். முன்னதாக கட்சி கொடியேற்றி, தேச தலைவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியினருக்கு இனிப்பு, பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர் கந்தசாமி, முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் அனந்தராமன், தீப்பாய்ந்தான், துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, பி.கே.தேவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:காங்கிரஸ் கட்சி 134 ஆண்டுகளை முடித்து, 135வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இதுபோன்ற பழமையான வரலாறு கிடையாது. ஆட்சியில் இல்லாதபோது சரியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களுக்கான திட்டங்களை பெற்று தருவதில் முன்னோடியாக திகழ்கிறது. நேரு தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது வெள்ளையர்கள் நாட்டை சுரண்டி எடுத்துக்கொண்டு, காலியாக விட்டுச் சென்றிருந்தனர். குடிநீர், மின்சாரம், சாலை வசதி எதுவுமே அப்போது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. எனவே, நாட்டில் வளர்ச்சியை உருவாக்கியதில் பெரும் பங்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால் இந்தியாவை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை என பொய் சொல்லி வருகிறார்கள். அந்த பொய் தற்போது மக்களிடம் எடுபடாது. நாட்டை சீர்படுத்தி, என்ன திட்டங்கள் தேவை என்று அடித்தளம் வகுத்தது காங்கிரஸ்.

காங்கிரஸ் கொண்டுவந்த உணவு உத்திரவாத சட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் பாஜக ஆட்சியில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை காவிமயமாக்க போகிறேன் என்று நாட்டை பாதாளத்திற்கு தள்ளிய பெருமை மோடிக்கும், அமித்ஷாவிற்கும் உண்டு. நாட்டில் பல மதங்கள், மொழிகள், ஜாதிகள் என இருந்தாலும், அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்த பெருமை உண்டு. அந்த ஒற்றுமைக்கு இப்போது குந்தகம் விளைவித்து வருகின்றனர். மக்களிடம் பிரிவினையை உருவாக்க குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளனர். மக்களின் எண்ணத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தான் போராட்டத்தை தூண்டி வருவதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள். பாஜகவின் இந்த பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.

பாஜகவுக்கு வாக்களித்தது தவறு என மக்கள் இப்போது உணர தொடங்கி விட்டார்கள். இதனால் தான் பாஜக ஆண்ட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி மலர்ந்து வருகிறது. இந்தியாவில் 70 சதவீத மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்த நிலை தற்போது 30 சதவீதமாக குறைந்துவிட்டது. தியாகத்தால் வளர்ந்த இயக்கம் காங்கிரஸ். சோனியா, ராகுல் பாதையை பின்பற்றி செல்ல இந்த உதய தினத்தில் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : BJP ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...