×

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாவட்டத்தில் 5,96,566 பேர் வாக்களிக்கின்றனர்

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (30ம்தேதி) உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 5 லட்சத்து 96 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நாளை(30ம்தேதி) இரண்டாம் கட்ட தேர்தல் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி, வேட்பாளர்களின் பிரசாரம் நேற்று மாலை 5 மணிவுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலுக்காக 5 ஒன்றியங்களிலும் 1046 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5 லட்சத்து 96 ஆயிரத்து 566 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, 4 விதமான வாக்குச்சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஊராட்சி தேர்தலுக்காக 23 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 456 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 8317 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் முதற்கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முன்னாள் ராணுவத்தினர், அந்தந்த ஒன்றியங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று (29ம்தேதி) மாலை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், பொருட்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்திட தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : voting ,round ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...