×

வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி, டிச. 27:  பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பொதுப்பணி துறையில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கடந்த 2014ல் 250 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.290 என்ற கணக்கில் 16 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இவர்கள் தங்களை விதிமுறைப்படி நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஒரு நாள் சம்பளமான ரூ.290ஐ ரூ.200 ஆக குறைத்து சமீபத்தில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுப்பணித்துறை வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் நேற்று காலை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் சிறப்பு பணி அதிகாரி கார்த்திகேயனின் அலுவலகத்துக்கு சென்று அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பொதுப்பணித்துறை வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏன் இதுவரை எங்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கவில்லை என கேட்டும், நாள் சம்பளத்தை ஏன் குறைத்தீர்கள் என கேட்டும் அதிகாரியிடம் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சங்க பொருளாளர் நரேந்திரன் கூறும்போது, புதுச்சேரி பொதுப்பணித்துறை வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்குவதில் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. 1998 முதல் வாரிசுதாரர்களுக்கு நிரந்தர வேலை இதுவரை தரவில்லை. விதிகளை மீறி நிரந்தர ஊழியர்களாக எங்களை நியமிக்காமல் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தினர். 5 ஆண்டுகளாக பணிபுரிந்தும் எங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றவில்லை. இந்த நிலையில் தற்போது வழங்கி வரும் நாள் சம்பளம் ரூ.290ல் இருந்து தற்போது ரூ.200 ஆக குறைத்துள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம். பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றார்.தொடர்ந்து, சிறப்பு பணி அதிகாரி கார்த்திகேயன் சமரச பேச்சு நடத்தி, 2 நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று பிற்பகல் 3 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Successor voucher employees ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...