×

சூதாட்ட கிளப்புகள் துவங்குவதுதான் வளர்ச்சியா?

புதுச்சேரி, டிச. 27:  சூதாட்ட கிளப்புகள், லாட்டரி விற்பனையை துவங்குவதுதான் மக்கள் நலனா? புதுச்சேரியின் வளர்ச்சியா? இதற்கு முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளிக்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். குடியரசு  தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23ம் தேதி புதுச்சேரி வருகை  தந்தார். அப்போது முதல்வர் நாராயணசாமி அவரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.  அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும்,  கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ரூ. 700 கோடி வெளி மார்க்கெட்டில் கடன்  வாங்க அனுமதிக்க வேண்டும், புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதை கவர்னர் தடுக்கிறார்.  தொடர்ந்து மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும்  கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு கவர்னர் கிரண்பேடி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  சூதாட்ட கிளப்புகளை ( கேசினோ) திறப்பது, மதுபான கடைகளை திறப்பது, லாட்டரி விற்பனையை தொடங்குவதுதான் புதுச்சேரியின் வளர்ச்சியா? இதுதான் மக்கள் நலனா? இதுவே ஏழைகளுக்கானது என அழைக்க வேண்டுமா?  இதுகுறித்து முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரி மக்கள்  இது போன்ற வணிகம் எதையும் விரும்பவில்லை.

கருத்து வேறுபாடு ஏற்படும்போது, மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணலாம்.  நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை இருக்கிறது. கொள்கை ரீதியிலான விஷயத்தில் அமைச்சரவைக்கும், நிர்வாகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கிறது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்ல முடியும்?  புதுச்சேரியின் சமூக நலன், ஆன்மிக உணர்வு என்னுள்  இருக்கிறது என்பதை அடிக்கடி நினைவு கூற வேண்டுமா?

அதிகப்படியான  சுற்றுலா பயணிகள் வரும் இந்த நேரத்தில் மக்கள் பாதிக்கக் கூடிய வகையில் பந்த்  நடத்துவது தேவையானதுதானா? இதன் மூலம் சுற்றுலா பயணிகள்  வருகையை  ரத்து செய்துவிடுவார்கள்.  மாநிலத்தின் வருவாயை அதிகமாக பாதிக்கும். தற்போது, பந்த்  விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.  இதனை முதல்வரும் உறுதி செய்ய வேண்டும்.  சுற்றுலா உச்சத்தில்  இருக்கும் போது, போராட்டங்கள் தேவையில்லை என  மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசிடம் முறையிட வேண்டும். ஏனெனில் புதுச்சேரியில் ஆண்டு முழுவதற்கான சுற்றுலா வருமானத்தின்  பெரும்பகுதி தற்போதுதான் கிடைக்கும். சுற்றுலா  பயணிகளுக்காக கடற்கரையும் ஆன்மிக இடங்களும் காத்திருக்கின்றன. இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

Tags : Gambling Clubs ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...