×

அடித்தட்டு மக்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்

புதுச்சேரி, டிச. 25: புதுச்சேரி சட்டமன்றத்தின் ஒரு மனதான முடிவுகளை ஏற்க மறுத்தது ஜனநாயக முரண் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்னாள் எம்.பி.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும், மாநில தேர்தல் ஆணையரை நியமித்ததற்கும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு மிகவும் துரதிஷ்டவசமானது. ஒரு நிர்வாக ஆணையின் மூலம் புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இச்செயல் மூலம் மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது என்பதை உள்துறை அமைச்சகம் உணர்த்தியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இத்தகைய செயல்கள் ஏற்புடையதல்ல. உள்துறை அமைச்சக அதிகாரிகள் புதுச்சேரி சட்டமன்றத்தை சிறுமையாக்கியதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கிறார்கள். இது அரசியலமைப்புக்கு எதிரான செயல். இப்படி ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சகம் மதிப்பீடு செய்தால் புதுச்சேரிக்கு சட்டமன்றம் எதற்கு? கடந்த சட்டமன்ற தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் இலவச அரிசி வழங்குவதை வாக்குறுதியாக அளித்தனர். அதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரில் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இத்திட்டம் முந்தைய அரசாலும் செயல்படுத்தப்பட்டது. புதுவை மக்களும் அதை விரும்புகிறார்கள்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமை. அதைத்தான் சட்டமன்றம் செய்துள்ளது. அதை எப்படி நிராகரிக்கலாம்? அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்திலும் குறைபாடுகள் உள்ளதை உள்துறை அமைச்சகம் உணர தவறியிருக்கிறது. அரிசிக்காக வழங்கப்பட்ட பணம் வேறு நோக்கங்களுக்கு செலவிடப்பட்டால் அடித்தட்டு மக்களின் உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். எந்த மாநிலத்திலும் அகில இந்திய விளம்பரத்தின் மூலம் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதில்லை. வழக்கமாக மாநில அமைச்சரவை சிபாரிசு செய்யும் அரசு செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவரைத்தான் மாநில ஆளுநர் தேர்தல் ஆணையராக நியமிக்கிறார். இதைப்பின்பற்றி அமைச்சரவை பரிந்துரைக்கும் குழுவில் உள்ள நபர்களில் ஒருவரை ஆணையராக நியமிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், சட்டமன்றத்தின் ஒருமனதான முடிவுகளை ஏற்க மறுத்தது ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணானது. யூனியன் பிரதேச சட்டம் 1963 அலுவல் விதிகள் தொடரும் வரை சட்டமன்றம் தொடர்ந்து அவமதிக்கப்படும் என்பதை ஜனநாயக உணர்வோடு எம்எல்ஏக்கள் அணுக வேண்டும். இப்போதாவது பிரச்னையின் உண்மைத்தன்மையை உணர்ந்து, மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...