×

தர்மபுரி பிடிஓ அலுவலகத்திற்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைப்பு

தர்மபுரி, டிச.25: தர்மபுரி பிடிஓ அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்திருந்த, ரோட்டரி சங்க திருமண மண்டபத்தை வருவாய்துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.  தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமாக நான்கு ரோடு அருகே சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடி நிலம் உள்ளது. இதில் அரசு குடியிருப்புகள் மற்றும் காலி நிலம் இருந்தது. நாளடைவில் அரசு குடியிருப்புகளுக்கு, அதிகாரிகள் யாரும் குடிபுகாததால் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிடிஓ அலுவலக குடியிருப்பின் அருகே இருந்த காலி நிலத்தில், ரோட்டரி சங்கத்தால் ஆக்கிரமித்து திருமண மண்டபம், தையல் பயிற்சி மையம், கண் சிகிச்சை மையம் ஆகியன கட்டப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி பிடிஓ அலுவலக அதிகாரிகள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து தர்மபுரி ரோட்டரி சங்கத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி, காலி செய்யுமாறு ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு, தர்மபுரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் ரோட்டரி சங்கத்தினர் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்யவில்லை. இதையடுத்து நேற்று மாலை 7 மணியளவில், தர்மபுரி தாசில்தார் சுகுமார், பிடிஓ ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் ரோட்டரி சங்க திருமண மண்டபத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, திருமண மண்டபம், தையல் பயிற்சி மையம், கண்சிகிச்சை முகாம் நடத்தும் அலுவலகம் ஆகிய கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர். ரோட்டரி சங்க திருமண மண்டபம் 508 சதுர மீட்டரிலும், தையல் பயிற்சி மையம், கண்சிகிச்சை முகாம் நடத்தும் அலுவலகம் ஆகியவை 387 சதுர மீட்டரிலும் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : building ,office ,Dharmapuri PDO ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...