×

தர்மபுரியில் கிடப்பில் போடப்பட்ட சனத்குமார் நதியை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

தர்மபுரி, டிச.24: தர்மபுரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சனத்குமார் நதியை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகரத்தின் வழியாக தென்பெண்ணையின் கிளை நதியான சனத்குமார் நதி கால்வாய் செல்கிறது. வத்தல்மலை அடிவாரம், தின்னஅள்ளியில் தொடங்கி சோழராயன் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, ஏமகுட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏரி, கிணறுகளுக்கு நீர் ஆதாரத்தை வழங்கி வருகிறது. சுமார் 42.84 கிலோ மீட்டர் பயணித்து, கம்பைநல்லூர் அருகே கூடுதுறைப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. வறட்சியால் நீர்வரத்து குறைந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக ஆற்றின் பயணம் சுருங்கியது. இதனால், மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் செல்லும் நதியாக மாறியது.

மேலும், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குழாய்கள் மூலம் நேரடியாக இந்த ஆற்றில் கலக்கப்படுவதால், தண்ணீர் மாசடைந்து நிறம் மாறியது. மேலும், குப்பைக் கழிவுகள், கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டு, கழிவுநீர் ஓடையாக மாறி விட்டது. தர்மபுரி வட்டாரத்தில், தின்னஅள்ளி, மாதேமங்கலம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு, மிகப்பெரிய நீராதாரமாக விளங்கிய சனத்குமார் நதியை தூர்வார வேண்டும் என சூழலியல் ஆர்வலர்களும், விவசாயிகளும் தொடர்ந்து அரசு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தின்னஅள்ளியில் தொடங்கி கெலவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கூடுதுறைப்பட்டி வரையிலான 42 கிலோ மீட்டர் தொலைவுள்ள சனத்குமார் நதி, மகாத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ₹50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான தொடக்க விழாவும் நடந்தது. இந்த ஆற்றை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படும். மேலும் நீராதாரத்தை செழுமைப்படுத்த, 383 மூழ்கு குழிகள், 184 செறிவூட்டுக் குழிகள், 36 செறிவூட்டுக் கிணறுகள், 52 கம்பி வலை தடுப்பணைகள், 36 கான்கிரீட் தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2 மாதத்திற்கு முன்பு ₹50 கோடியில் சனத்குமார் நதி தூர்வார அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடந்தது. பொக்லைன்  மூலம் பணிகளும் தொடங்கியது. ஆனால், தற்போது பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சனத்குமார் நதியை தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : Sanatkumar River ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி