×

எடப்பாடி அரசு இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து

ஊட்டி, டிச. 24:தமிழகத்தில்  முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு இருக்கும் ஒவ்வொரு  நாளும் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என ராசா எம்.பி. தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள்  மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும்  மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் கலவரங்கள்  வெடித்துள்ளது. தமிழகத்திலும் போராட்டங்கள் துவங்கியுள்ளன.

நேற்று நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் ஊட்டி ஏ.டி.சி.  சுதந்திர திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இஸ்லாமிய  கூட்டமைப்பு நிர்வாகி இச்சுபாய் வரவேற்றார். செயல் தலைவர் பத்ருதீன் நிஜாமி  தொகுப்புரை வழங்கினார். நீலகிரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பத்வா குழு  உறுப்பினர் முகமது அலி ரஷாதி கிராத் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்ட  இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நிஹ்மத் இப்ராஹிம் தலைமை வகித்தார். நீலகிரி,  கோவை, திருப்பூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹீம் பாகவி,  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹாஜா கணனி, இஸ்லாமிய  அழைப்பாளர் உசேன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டன  உரையாற்றினர்.

இதில் நீலகிரி மாவட்ட எம்.பி.யான ராசா கலந்துகொண்டு  பேசியதாவது: நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம்  கள்ளத்தனமாக, அவசர கோலத்தில், ஜனநாயக நெறிமுறைகளை படுகொலை செய்து,  அரசியல் சட்டத்தை புதை குழியில் வீழ்த்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து திங்கட்கிழமை  நாடாளுமன்ற, மக்களவைக்கு கொண்டு வந்து, அன்று இரவே நிறைவேற்றி செவ்வாய்க்கிழமை  அதிகாலை சட்டத்தை நிறைவேற்றி, புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாநிலங்களவைக்கு  செல்கிறது.

 அங்கேயும் அவசரமாக இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது. 3 நாட்களில் ஒரு அரசாங்கம் ரகசியமாக வைத்திருந்து, விவாதத்திற்கு விடாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவின் நகலை வழங்காமல்  திருட்டுத்தனமாக, கள்ளத்தனமாக தனக்கு உள்ள அசுர பலத்தை வைத்துக்கொண்டு பா.ஜ.க. அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு  முறையானது என்பது நமது குற்றச்சாட்டு. ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் மதத்தை குடியுரிமை சட்டத்தில் இருந்து விலக்கி  வைக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை  உருவாக்கிய சட்ட மேதைகள் எல்லாரும், இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க  வேண்டும் என்பதையே கூறியுள்ளனர். பாகிஸ்தான் ஒரு மத நாடாக உள்ளது நாம் அறிவோம். ஆனால், இந்திய அரசியல்  சட்டத்தை எழுதிய முன்னோர்கள், இது ஒரு மதசார்பற்ற நாடு என முடிவுக்கு வந்தனர்.  

 இந்தியாவில், பல்வேறு மொழி, இனம், மதத்தை சேர்ந்தவர்கள் வாழுகின்றனர்.  மோடி மற்றும் அமித்ஷா போன்றவர்கள்  நாட்டை ஆள வருவார்கள் என தெரிந்தே, இந்தியாவை மத சார்பற்ற நாடு என இந்திராகாந்தி அறிவித்தார். இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு நாடு, மதசார்பற்ற நாடு என இந்திய  அரசியல் சட்டத்தின் முதல் வரியில் கூறப்படுகிறது. அரசியல் சட்டத்தை எத்தனை  முறை வேண்டுமானாலும் திருத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால்,  அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்புகளை ஒரு போதும் மாற்றக் கூடாது என  கூறியுள்ளது. இதனை மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள்  கூறியுள்ளனர். இச்சட்டம் நடப்பில் உள்ளது. தனக்கு உள்ள மெஜாரிட்டியை  வைத்துக்கொண்டு ஒரு மதத்தினரை விலக்கி வைப்பதற்கும், குடியுரிமை  சட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுப்பதை கண்டிப்பது மட்டுமின்றி, அதனை  கொண்டு வரக்கூடாது என குரல் கொடுத்து வருகிேறாம்.

எந்த ஒரு நாட்டிலும் மத  அடிப்படையில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றியதில்லை. வங்காளதேசத்தில் இருந்து  வந்தவர்களை நாம் வரவேற்று, நம்முடன் வாழ வைத்து வருகிேறாம்.  ஆனால், அவர்களை குடியுரிமை சட்டம் நீங்கள் காப்பகத்திற்கு வாருங்கள் என்று  கூறுவது எவ்வளது கொடுமையானது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை  குடியுரிமை வழங்கலாம் என கூறி வருகிறது. அ.தி.மு.க. குடியுரிமை சட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து மக்களவையில் கையெழுத்து போட்டுவிட்டு வந்துள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த  உறுப்பினர்கள் 11 பேரும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி என 12  பேர் ஓட்டு போட்டு இச்சட்டத்தை நிறைவேற்ற உதவியுள்ளனர்.

அவர்கள்  நினைத்திருந்தால், இச்சட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்திருக்கலாம். தமிழகத்தில்  முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் இருக்கும் ஒவ்வொரு நாளும்  இந்திய இறையாண்மைக்கு ஆபத்து. பெரியார்,  அண்ணா, கலைஞர் போன்றவர்கள் பிறந்த திராவிட மண்ணில், சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எட்டபாடி அரசாங்கத்தை சேர்ந்தவர்களை  தமிழ்நாட்டிற்குள்ளேயே விடக்கூடாது. தி.மு.க. ஒரு மாநில கட்சி. ஆனால்,  இந்த தேசத்தில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்கள் பாதிக்கக்கூடாது என ஸ்டாலின்  போராடி வருகிறார். இதுதான் பெரியார் ஊட்டிய உணர்வு. இந்தியா என்பது  இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர்களுக்கு சொந்தம். இதனை பிரிக்க தி.மு.க.  ஒரு போதும் அனுமதிக்காது, என்றார். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை  சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : state ,Indian ,
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...