×

பாதாள சாக்கடை பணிக்காக பிரப் ரோட்டில் போக்குவரத்து திடீர் மாற்றம்

ஈரோடு, டிச. 24: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 5 பகுதிகளாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ள நிலையில் பணிகள் துவங்காத இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகரின் மைய பகுதியான பிரப்ரோட்டில் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக போக்குவரத்தை மாற்றம் செய்து பொக்லைன் வாகனம் உதவியுடன் குழி தோண்டப்பட்டது. பிரப்ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து சவீதா கார்னர் வரை திடீரென போக்குவரத்தை மாற்றியதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

பெருந்துறை ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் சென்ற நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நெரிசலை சரி செய்தனர். இந்த பணிகள் எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் திடீரென துவங்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். வாகன ஓட்டிகள் கூறுகையில்,`ஈரோடு மாநகர பகுதிகளில் எப்போது போக்குவரத்தை மாற்றி விடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. அடிக்கடி பாதாள சாக்கடை பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி, பாதாள மின்கேபிள் பணி போன்ற பணிகளுக்காக ரோடுகளை பல இடங்களில் தோண்டி போட்டு வாகன ஓட்டிகளை அலைக்கழித்து வருகின்றனர். நேற்று காலையில் இருந்து பிரப்ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்த நிலையில் திடீரென மதியத்திற்கு மேல் தடுப்புகள் வைக்கப்பட்டு பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கிறது.  மாற்று வழியில் செல்லுங்கள் என போக்குவரத்து போலீசார் விரட்டுகின்றனர். எந்தெந்த பகுதிகளில் இதுபோன்ற பணிகள் நடக்கிறது என முன்கூட்டியே அறிவித்து அதற்கேற்ப வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Brab Road ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...