×

மாடிப்படி, சுவர்களை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் உத்தரவு: தினகரன் செய்தி எதிரொலி

வேலூர், டிச.22: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிதிலமடைந்த மாடிப்படி, சுவர்களை சீரமைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற வந்து செல்கின்றனர். அதேபோல் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வாரத்தின் ஆறு நாட்களும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் பராமரிப்பு பணிகள் முடங்கியதால் கட்டிடத்தின் ஒருபகுதி மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அருகே மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு உடைந்து கிடக்கிறது. சுவர்கள் மிகவும் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் சுவற்றில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே கொட்டும் அவல நிலையில் உள்ளது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் துரு பிடித்து அதன் உறுதித்தன்மையை இழந்து விபத்து ஏற்படுத்தும் அவல நிலையில் உள்ளது. மின்சார ஒயர்களும் வெடிப்பு ஏற்பட்டு மின்கசுவு ஏற்படும் அவல நிலையில் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தினகரன் நாளிதழில் கடந்த 19ம் தேதி செய்தி வெளியானது.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தின் பழுதடைந்த பகுதிகளில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர், கட்டிடங்களில் உள்ள பழுதுகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும், பழுதடைந்த குடிநீர் குழாய்கள், பைப் லைன் இணைப்புகள் ஆகியவற்றை மாற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், கலெக்டர் அலுவலகத்தின் பராமரிப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ள இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Dinakaran News ,
× RELATED குழித்துறை நகராட்சியில் மாயமான பேட்டரி வாகனங்கள் மீண்டும் வந்தன