×

குழித்துறை நகராட்சியில் மாயமான பேட்டரி வாகனங்கள் மீண்டும் வந்தன

குழித்துறை : குழித்துறை நகராட்சியில் குப்பை அள்ள வாங்கப் பட்ட பேட்டரி வாகனங்கள் மாயமானது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்போது அந்த வாகனங்கள் மீண்டும்நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றை காலதாமதமின்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  குழித்துறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு  மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. பின்னர் மட்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மார்த்தாண்டம் சந்தை பகுதியில் உர கிடங்கும் அமைக்க பட்டுள்ளது. இந்நிலையில் குழித்துறை  நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பை அள்ளுவதற்காக,  2019-ம் ஆண்டு வாங்கப்பட்ட 9 பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து திடீரென மாயமாகின.இது குறித்து முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் விஜு கூறுகையில் : குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக குடியிருப்புகளை கொண்ட வார்டுகளில், குப்பை அள்ளுவதற்காகவும் பெரிய வாகனங்கள் பயன்படுகின்றன. அதில் சில பகுதிகளுக்கு பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அப்பகுதிகளுக்கு, ‘பேட்டரி’ வாகனம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் இந்த பாட்டரி குப்பை வண்டியை கையாள்வதும் எளிதாகும் என்பதனை கருத்தில் கொண்டு  15 லட்சம் ரூபாய் செலவில்,  ‘பேட்டரி’ வாகனங்கள் வாங்கப்பட்டன.இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சில மாதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் நகராட்சி பகுதியில் இயக்கபட்டு வந்த  பாட்டரி வாகனங்களில் 9 வாகனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மாயமாகி உள்ளது குழித்துறை நகர மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம்.பேட்டரி வாகனம் மாயமான நிலையில் தூய்மை பணியாளர்கள் சாக்கு பையில்  குப்பைகளை மூட்டையாக அள்ளி தரையில் இழுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக குழித்துறை நகராட்சி வளாகத்தில் காணாமல் போன பேட்டரி வாகனங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களை குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்கு காலதாமதம் இன்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குழித்துறை நகராட்சியில் மாயமான பேட்டரி வாகனங்கள் மீண்டும் வந்தன appeared first on Dinakaran.

Tags : Kulitura ,Dinakaran News ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்