×

தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் ஈக்கள்

தர்மபுரி, டிச.19: தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவ்சங்கர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, அலிரோடைகஸ் ரூஜியோ பெர்குலேட்டஸ் எனும் பூச்சி, பெருமளவில் தாக்குதல் ஏற்படுத்தி வருகிறது. இந்த பூச்சி தென்னை மரங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், வாழை மற்றும் காய்கறி பயிர்களான வெண்டை, தக்காளி போன்றவற்றை சேதப்படுத்தும். இந்த பூச்சியானது சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. இது தென்னை மர இலைகளில் இருக்கக்கூடிய பச்சையத்தை முழுவதையும் உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. இதனால் தென்னை மரங்களில் மகசூல் இழப்பு ஏற்படும்.  இந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையில் எல்லா ரகங்களையும் தாக்கும். குறிப்பாக குட்டை ரக மரங்களை அதிகமாக தாக்குகிறது. நன்மை தரும் பூச்சிகளான ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளை கொண்டு இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே, தென்னந்தோப்புகளில் அதிக அளவில் காணப்படும். எனவே, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை நிறுத்த வேண்டும். சேதம் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மிலி (அ) அசாடிராக்டின் 1 சதம் (2 மிலி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுத்திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்க வேண்டும். தென்னையைத் தாக்கும் இந்த ரூகோஸ் வெள்ளை ஈக்களை விழுங்கும் இரை விழுங்கியான, பச்சை கண்ணாடி இயற்கை பூச்சியின் முட்டைகள் ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையிலும், என்கார்சியா எனப்படும் ஒட்டுண்ணி ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இயற்கை எதிரிகள் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் முட்டை குவியல்கள், ஆரம்ப நிலை புழுக்களையும் உண்ணுவதன் மூலம் தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இம்முறைகளை அனைத்து தென்னை விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டும் கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் ஒரு தென்னந்தோப்பிலிருந்து மற்றொரு தென்னந்தோப்புகளுக்கு எளிதில் இனப்பெருக்கம் செய்து பரவி விடும். எனவே, விவசாயிகள் தங்கள் தென்னந்தோப்புகளில், அமெரிக்க வெள்ளை ஈக்கள் தாக்குதல் தெரிந்தால், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : south ,
× RELATED யானை வழித்தடங்களில் உள்ள மின்...