×

குமரியில் களைகட்ட தொடங்கிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் பேக்கரிகளில் கேக்குகள் தயாரிப்பு மும்முரம்

நாகர்கோவில், டிச. 19: நாடுமுழுவதும் கிறிஸ்தவர்கள் யேசு பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விழாவை சிறப்பாக கொண்டாட கிறிஸ்தவர்கள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கருங்கல், பாலப்பள்ளம், மூலச்சல் உள்பட பல பகுதியில் பிரமாண்ட குடில்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுபோல் வீடுகளிலும் சிறிய குடில்கள் அமைத்து, யேசு பிறப்புகளை பொம்மைகள் கொண்டு சித்தரித்து வைத்து வருகின்றனர்.   மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் மின்விளக்குகளை கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. நாகர்கோவில் நகர பகுதியில் பெரும்பாலான கிறிஸ்தவ வீடுகளில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு, வீட்டின் முன்பகுதியில் ஸ்டார் விளக்குகளை தொங்கவிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மரங்களையும் வைத்து அலங்கார மின்விளக்குகள் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஸ்டார் விளக்குகள் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.  இதுபோல் கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வடமாநிலத்தை சேர்ந்த பலர் வடசேரி பார்வதிபுரம் சாலையின் ஓரத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

வாகனங்களில் செல்பவர்கள் நின்று வாங்கிச்செல்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட பலர் தற்போது புது துணிகளையும் எடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமாக இடம்பெறுவது பிளம் கேக். இந்த பிளம் கேக் தயாரிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளும் ஈடுபட்டு வருகின்றன.  குறிப்பாக பிளம் கேக், பட்டர்கேக், சாக்லெட் புட்டிங்கேக், புரூட்கேக், நட்ஸ் கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரி கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது: கிறிஸ்துமஸ் விழா என்றாலே அதிகளவு விற்பனையாவது பிளம்கேக் மற்றும் பட்டர்கேக் ஆகும். பிளம்கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கேக் கிலோ ₹700 முதல் ₹770 வரை விலை உள்ளது. பட்டர்கேக் கிலோ ₹440க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டர்கேக்குகள் கிறிஸ்துமஸ் விழாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தயாரிக்கப்படும். பிளம் கேக் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் தற்போது வாங்கி செல்கின்றனர். இதுபோல் சாக்லெட் புட்டிங் கேக், புரூட் கேக், நட்ஸ் கேக் ஆகியவை தயாரிக்கப்படவுள்ளது. இந்த கேக்குகள் கிலோ ₹450 முதல் கிடைக்கும். பலர் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர் என்றார்.

Tags : Christmas Celebration Celebration ,
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்