×

மதுபாட்டில் கடத்தியவர் கைது; கார் பறிமுதல்

பாகூர். டிச. 19:  பாகூர் அருகே காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில் கடத்தலை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுக்கிணங்க தேர்தல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பீட் போலீசார் பிரவீன், பாண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசார் மீது கார் மோதுவது போல் வந்து வேகமாக சென்றது.

சந்தேகமடைந்த போலீசார் சிறிது தூரம் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த காரை சோதனையிட்டபோது அதில் மதுபாட்டில் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த வாலிபரை போலீசார் பாகூர் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், பாகூர் சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (22) என்பதும், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியிலிருந்து 10 பெட்டிகளில் 500 மதுபாட்டிலை தமிழக பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார், 500 மதுபாட்டில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கலால்துறை உதவியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட எஸ்ஐ மற்றும் பீட் போலீசாருக்கு தெற்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், பாகூர் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Alcohol smuggler ,
× RELATED காரில் மது கடத்தியவர் கைது