×

ஆரணி ஒன்றியத்தில் பரபரப்பு போலி கையெழுத்திட்டதாக வேட்புமனுக்கள் நிராகரிப்பு

ஆரணி, டிச.19: ஆரணி ஒன்றியத்தில் போலி கையெழுத்திட்டதாக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 4 மாவட்ட கவுன்சிலர், 36 ஒன்றிய கவுன்சிலர்கள், 75 ஊராட்சி தலைவர்கள், 585 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைந்தது. அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 209 பேரும், ஊராட்சி தலைவருக்கு 422 பேரும், கிராம வார்டு உறுப்பினருக்கு 1,529 பேர் என மொத்தம் 2,192 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், ஆரணி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களில் சிலர் தங்களது வேட்புமனுவில் முன்மொழிந்ததாக போலி கையெழுத்து போட்டு மனுதாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, ஆரணி ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் சில வேட்பாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது புகார் அளிக்கப்பட்ட ஒரு சில வேட்பாளர்களின் மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.

அப்போது, வேட்பாளர்கள், ஏன் எங்களது மனுக்களை மட்டும் தள்ளுபடி செய்தீர்கள் எனக்கேட்டனர். அதற்கு அதிகாரிகள், நீங்கள் வேறு ஒரு நபருக்கு முன்மொழிந்துவிட்டு, நீங்களும் போட்டியிடுவதற்கு மனு அளித்துள்ளீர்கள். எனவே மற்றவர்களுக்கு முன்மொழிந்தபிறகு நீங்கள் போட்டியிட முடியாது என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் அங்கு வந்தனர். போலீசாரின் சமரசத்தை ஏற்று அதிகாரிகள் மனுக்களை வேட்பாளர்களுக்கு காண்பித்தனர். அதனை பார்த்த வேட்பாளர்கள், அதில் உள்ளது எங்களுடைய ைகயெழுத்து இல்லை. இது போலியாக போடப்பட்டுள்ளது என்றனர். அதற்கு அதிகாரிகள், உங்கள் குற்றச்சாட்டுகளை மனுவாக கொடுங்கள். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதைத்தொடர்ந்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் விசாரணை நடத்தினார். அப்போது, முன்மொழிந்ததில் போலி கையெழுத்திட்டதாக ஒரு சில வேட்பாளர்களின் மனுக்களை மட்டும் தள்ளுபடி செய்தார்.
இச்சம்பவம் ஆரணி ஒன்றியத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : nominees ,signing ,Aranchi Union ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி...