×

மண் அரிப்பை தடுக்கும் கம்பு, நேப்பியர் புற்கள்

ஊட்டி, டிச. 18: கம்பு,  நேப்பியர் போன்ற வகை புற்கள் பயன்படுத்துதால் மண் அரிப்பை தடுப்பதுடன்  பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என ஊட்டியில் நடந்த பயிர் சாகுபடி பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுடெல்லியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப  அமைச்சகத்தின் உயிரியல் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவியுடன் ஊட்டியில்  உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம்  சார்பில், நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மண்  வள பாதுகாப்பு மற்றும் தீவனத்திற்கு உகந்த பயிர்களின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் துவங்கியது. இதில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இப்பயிற்சியில் விரிவுரைகள், செயல் முறை விளக்கங்கள், களப்பார்வை  ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பயிற்சியின் தொடக்க விழா ஊட்டியில்  நடந்தது. இதில் சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும்  பேராசிரியர் அனில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி  வைத்தார்.  இதையடுத்து அனில்குமார் பேசியதாவது: தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை  குறைந்து கொண்டே வருகிறது. பால் உற்பத்திக்கு மட்டுமின்றி, இயற்கை  விவசாயத்திற்கு தேவைப்படும் (எருவு) உரத்திற்காகவும் கால்நடை வளர்ப்பது  அவசியம், என்றார்.

 தொடர்ந்து மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன் கூறியதாது: நீலகிரியில் மண் அரிப்பை தடுப்பது மிகவும் அவசியம். மண்ணரிப்பை  தடுப்பதில் புற்களின் பங்கு இன்றியமையாதது. இதில் கம்பு, நேப்பியர் போன்ற  புதிய புல் வகைகளை பயன்படுத்தும் போது மண் அரிப்பை தடுக்கிறது. மேலும்  பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இது அடர் தீவனத்திற்கான  செலவினை குறைப்பது மட்டுமின்றி பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது,  என்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தராம்பாள், பயிற்சியின் நோக்கம்  குறித்தும், பாடத்திட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில்  மேல்கௌவட்டி, குருத்துக்குளி, தோட்டண்ணி, கங்கா நகர் மற்றும் கோத்தகிரி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.   இப்பயிற்சி முகாமில் ஆடு இன  விருத்தி ஆராய்ச்சி நிலையம் மற்றும் மாவட்ட கால்நடைப் பண்ணை,  தீவனப்பயிர்கள் துறை, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய  துறைகளின் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு  பயிற்சி அளிக்க உள்ளனர். தொடக்க விழாவில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப  அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Napier ,
× RELATED நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம்...